நாளை தேசிய வாக்காளர் தினம் என்பதால், இந்த புதிய மின்னணு வாக்காளர் அடையாள அட்டையை அறிமுகம் செய்ய இருப்பதாக தேர்தல் கமிஷன் அதிகாரிகள் தெரிவித்தார்.
இன்னும் 2 மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் மற்றும் புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களுக்கு நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கனவே தொடங்கியது. இதுவரை இல்லாத சில புதிய யுக்திகளை வரும் தேர்தலில் பயன்படுத்த தேர்தல் கமிஷன் நடவடிக்கை ஏற்படுத்தியுள்ளது. அதில் ஒன்றுதான் டிஜிட்டல் முறையிலான வாக்காளர் அடையாள அட்டை.
கொரோனா பரவல் காரணமாக, பல்வேறு பணிகள் தற்போது மின்னணு முறையிலேயே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விமான நிலையங்கள், சுங்கச்சாவடிகள் உள்ளிட்ட பல நுழைவு இடங்களில் டிஜிட்டல் முறையிலான ஆவணங்களே தற்போது பயன்படுத்தப்படு வருகிறது. அதேபோல், வாக்குச் சாவடிகளில் புதிய டிஜிட்டல் மின்னணு வாக்காளர் அடையாள அட்டையை வாக்காளர்கள் பயன்படுத்துவதற்கு தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்திருக்கிறது.
நாளை தேசிய வாக்காளர் தினம் என்பதால், இந்த புதிய மின்னணு வாக்காளர் அடையாள அட்டையை அறிமுகம் செய்ய இருப்பதாக தேர்தல் கமிஷன் அதிகாரிகள் தெரிவித்தார். வாக்காளர் பட்டியலில் இடம் பெற புதிதாக விண்ணப்பித்த வாக்காளர்களுக்கு இது கிடைக்கும். அவர்கள் தங்களது செல்போன் எண்ணை விண்ணப்பத்தில் பதிவுசெய்து இருக்க வேண்டும்.
ஏற்கனவே இடம் பெற்றுள்ள வாக்காளர் பட்டியலில், செல்போன் எண்ணை பதிவுசெய்த பழைய வாக்காளர்களுக்கு பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் மின்னணு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும். வலைத்தளங்கள் மூலம் வாக்காளர்கள் இதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
புதிய மின்னணு அட்டையில் வாக்காளர் பெயர், வரிசை எண், பாகம் எண், புகைப்படம் இருக்கும். இதில் புதிதாக ‘கியூ ஆர் கோடு’ பயன்பாட்டை கொண்டதாக அந்த அட்டை இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதை செல்போனில் பதிவிறக்கம் செய்து சேமித்துக்கொள்ளலாம்.