பொள்ளாச்சியை அடுத்த பெரியாக் கவுண்டனுர் சாலையில் குப்பைக் கழிவுகளை கொட்டிய லாரிகளை அப்பகுதி கிராம மக்கள் சிறைபிடித்ததால் அப்பகுதி பரபரப்பானது.
பொள்ளாச்சிலிருந்து தாராபுரம் செல்லும் சாலையில் இருக்கிறது பெரியாக் கவுண்டனுர். இன்று காலை நான்கு லாரிகளில் கொண்டுவரப்பட்ட குப்பைக் கழிவுகளை சாலையோரத்தில் ஒரு லாரியில் இருந்த குப்பைக் கழிவுகளை கொட்டினர். அடுத்தடுத்து மூன்று லாரிகளில் குப்பைக் கழிவுகளோடு கொட்டுவந்தது. முதல் லாரி குப்பைக் கழிவை கொட்ட முயன்றபோது, எதிர்பாராதவிதமாக லாரி விபத்துக்குள்ளானது.
இதைப்பார்த்து திரண்ட கிராம மக்கள் குப்பைக் கழிவுகளை இப்பகுதிகளில் கொட்ட எதிர்ப்பு தெரிவித்தனர். சுகாதார கேடு விளைவிக்கும் குப்பைக் கழிவுகளை இங்கே எதற்காக கொட்டுகிறீர்கள் காரசாரமாக கூச்சலிட்டனர். பதில் சொல்லத்தெரியாத டிரைவர்கள் தலைகுனிந்து நிற்க லாரிகளை சிறைப்பிடித்து வைத்தனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் லாரி டிரைவர்கள் வடிவேல், வேலுச்சாமி, சிவக்குமார் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். இதில் லாரிகளில் ஏற்றி வரப்பட்ட குப்பைக் கழிவுகள் பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட மரப்பேட்டை கழிவுநீர் கால்வாய் சுத்திகரிக்கப்பட்ட போது அகற்றப்பட்ட குப்பைக் கழிவுகள் என்பது தெரியவந்தது.
மேலும், ஒப்பந்ததாரர் கூறியதன் பேரில் கழிவுநீர் கால்வாய் குப்பைக் கழிவுகளை இங்கே கொட்ட வந்ததாக லாரி டிரைவர்கள் கூறினார்கள். இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதாகக்கூறி போலீசார் கூறியதால் கிராம மக்கள் கலைந்து சென்றனர். இதனால் சிறிதுநேரம் அப்பகுதி பரபரப்பானது.