சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனையில் இருக்கும் வி.கே.சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரது தண்டனைக் காலம் முடிவடைய இருக்கிறது. வருகிற சனவரி 27ஆம் தேதி வி.கே.சசிகலா விடுதலையாவதாக கர்நாடக சிறைத்துறை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரிவித்திருக்கிறது.
மனமுடைந்த எடப்பாடி
வி.கே.சசிகலா சிறையில் இருந்து வந்தால் எப்படிப்பட்ட அரசியல் மாற்றம் இருக்கும் என விவாதிக்கப்பட்டு வருகிறார்கள். எடப்பாடி பழனிச்சாமியைப் பொறுத்தவரை சட்டமன்றத் தேர்தல் வரை வி.கே.சசிகலா வெளியே வருவதை விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. ஓ.பன்னீர்ச்செல்வம் இதற்கு நேர்மாறான யோசனையில் உள்ளார் என்கிறார்கள்.
முக்குலத்தோர் வாக்கு வங்கி எங்கே?
வி.கே.சசிகலா அதிமுகவில் இருந்தவரை முக்குலத்தோரின் வாக்கு பெரும் பலமாக இருந்தது. வி.கே.சசிகலா சிறை சென்ற பிறகு, டிடிவி.தினகரன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என தனிக் கட்சி தொடங்கிய பிறகு, ஓ.பன்னீர்ச்செல்வம் ஓரங்கட்டப்பட்ட பிறகு முக்குலத்து சமூக வாக்குகள் அதிமுக பக்கம் வருவதில் சிக்கல் இருப்பதாக கூறுகிறார்கள். மேலும் கட்சியிலும் கொங்கு வேளாளர் சமூகத்தினரின் கையே ஓங்கியுள்ளது. வி.கே.சசிகலா வந்தபிறகு அதிமுக, அமமுக இணைப்பு ஏற்பட்டால் மட்டுமே அதிமுகவுக்கு முக்குலத்தோர் வாக்குகள் வரும் என்றும், அப்போதுதான் தமது செல்வாக்கும் உயரும் என்றும் ஓ.பன்னீர்ச்செல்வம் கணக்கு போடுவதாக கூறப்படுகிறது.
வி.கே.சசிகலா மீது நீங்காத கோபம்!
ஏறக்குறைய இப்படியான மனநிலையில்தான் பாஜகவும் இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அதன் டெல்லி தலைமை வி.கே.சசிகலா மீது இன்னும் கோபத்தில் இருப்பதாகவே தகவல் வெளியாகிவருகிறது. மறந்த முதல்வர் செல்வி.ஜெ.ஜெயலலிதா இருந்தவரை அவரை நெருங்கவிடாமல் தடுத்தவர் வி.கே.சசிகலா என்ற கோபம் அவர்களுக்கு இன்னமும் இருக்கிறது. இதன் காரணமாகவே வி.கே.சசிகலா தொடர்ந்து குறி வைக்கப்படுகிறார். விடுதலை நெருங்கும் சமயத்தில் தற்போது மற்றொரு புகார் தூசி தட்டப்படுகிறது.
மீண்டும் கிளம்பும் ஷாப்பிங் விவகாரம்!
வி.கே.சசிகலா கர்நாடக பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் சுதந்திரமாக இருக்க சிறை அதிகாரிகளுக்கு இரண்டு கோடி ரூபாய் லஞ்சமாக கைமாறியதாக சிறப்பு டிஐஜி ரூபா, டிஜிபி மற்றும் உள்துறைக்கு புகார் அனுப்பினார். இதை விசாரிக்க ஓய்வு பெற்ற ஐஏஎஸ் வினய்குமார் தலைமையில் ஒரு குழுவை நியமித்தது அப்போதிருந்த கர்நாடக அரசு. வினய்குமார் அறிக்கையில் சிறைவிதிமுறைகள் மீறியிருப்பதும் பணம் கைமாறியிருக்க முகாந்திரம் உள்ளது என்றும் அறிக்கை தாக்கல் செய்தார்.
கேள்விக் குறியாகும் விடுதலை!
அறிக்கையை வைத்து கர்நாடக மாநில ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார், சிறைத்துறை முன்னாள் டிஐஜி சத்யநாராயணா ராவ் மீது வழக்கு பதிவு (குற்ற எண் 7 /2018) செய்தனர். இந்த விவகாரத்தை கையிலெடுத்துள்ளதாக கூறுகிறார்கள். இதில் லஞ்சம் கொடுத்ததாக வி.கே.சசிகலா பெயர் சேர்க்கப்பட்டால் அவருக்கு பிடி வாரண்ட் பிறப்பிக்கப்படும் பட்சத்தில் விடுதலை கேள்விக்குறியாகும் என கூறப்படுகிறது.
டிடிவி.தினகரன் டெல்லி பயணம்!
இதை அறிந்துதான் அவசரமாக டெல்லி டிடிவி.தினகரன் சென்றுள்ளதாக கூறுகிறார்கள். வழக்கமாக உபயோகிக்கும் கார் அல்லாமல் வேறொரு காரில் டிடிவி.தினகரன் நேற்று பெங்களூர் சென்று அங்கிருந்து டெல்லி போய் பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்துள்ளதாக கூறுகிறார்கள். ஏற்கெனவே செப்டம்பர் 20ஆம் தேதி சத்தமில்லாமல் டெல்லி சென்று வந்த டிடிவி.தினகரன் மீண்டும் அதே போல் பயணம் மேற்கொண்டுள்ளதாக தெரிகிறது.