மதுரை நமது கோட்டை, இதை யாராலும் மாற்ற முடியாது. எத்தனையோ பேரை அமைச்சராக்கியுள்ளேன். ஆனால் ஒருவருக்கு கூட நன்றி இல்லை. மு.க.ஸ்டாலினுக்கு பொருளாளர் பதவியை வாங்கித்தந்ததே நான்தான்! - மு.க.அழகிரி பேச்சு
பரபரப்பாக இருந்த நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் "என்ட்ரீ" அதே பரபரப்புடன் முடிந்திருக்கும் நிலையில், தென் தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பாக மு.க.அழகிரியின் ஆலோசனைக் கூட்டம் பார்க்கப்படுகிறது. கடந்த 6 வருடங்களாக திமுக-விலிருந்து நீக்கிவைக்கப்பட்டிருக்கும் மு.க.அழகிரி, நீண்ட இடைவெளிக்கு பிறகு அரசியல் ஆட்டம் ஆட தொடங்கி இருக்கிறார்.
மு.க.அழகிரி நடத்தும் கூட்டமெல்லாம் எங்களுக்கு ஒரு பொருட்டல்ல’ என்பதுபோல் திமுக தலைமை இருந்தாலும், மு.க.அழகிரி இந்த 2021 தேர்தலை சற்று அதிரடியாகவே கையாள்கிறார். மதுரையில் பெரிய விழா அரங்கமான பாண்டி கோயில் அருகே நான்கு வழிச்சாலையை ஒட்டியிருக்கும் ''துவாரகா பேலஸ்'' அரங்கில் கூட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டது.
மு.க.அழகிரி வீட்டில் இருந்து விழா நடைபெறும் இடம் வரையில் இருபுறமும் வரவேற்பு பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. அதில் மு.கருணாநிதி, மு.க.அழகிரி, துரை தயாநிதியின் படங்கள் மட்டுமே இடம் பெற்றிருக்கிறது. மதுரையில் இருக்கும் பாண்டி கோயில் நான்கு வழிச்சாலையில் மாலையில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
திறந்த வேன் மூலமாக ஆதரவாளர்களுக்கு கையசைத்தப்படி கூட்டம் நடைபெறும் அரங்கத்துக்கு மு.க.அழகிரி வந்தார். கூட்டத்தில் பேசிய மு.க.அழகிரி, ''துரோகிகளையும் சதிகாரர்களையும்'' எதிர்ப்பதற்கான முதல் படிக்கட்டாக இந்தக்கூட்டம் இருக்கும். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் கோட்டையாக இருந்து மதுரையை திமுக-வின் கோட்டையாக்கினேன். திருமங்கலம் இடைத்தேர்தலில் சிறப்பாக பணியாற்றி வெற்றி பெற்றோம், உலகமே திருமங்கலம் இடைத்தேர்தலை உற்று பார்த்தது. திருமங்கலம் பார்முலா என்பது ஒன்றுமில்லை. எங்களது கடினமான உழைப்பே வெற்றிக்குக் காரணம்.
இப்போதும் நான் உங்களில் ஒருவன், மதுரை நமது கோட்டை. திமுக-வில் இருந்து வைகோ அவர்கள் வெளியேறியபோது ஒருவர் கூட கட்சியை விட்டு வெளியேறவில்லை. பேராசிரியர் அன்பழகனுக்கு தெரியாமல் என்னை கட்சியில் இருந்து நீக்கினர். உடல் நிலை சரியில்லாத தலைவர் கருணாநிதியை கட்டாயப்படுத்தி திருவாரூரில் போட்டியிட செய்தனர்' என்றார்.
தொடர்ந்து பேசிய மு.க.அழகிரி, தலைவர் கலைஞரிடம் இல்லாததைச் சொல்லி என்னை கட்சியில் இருந்து நீக்கி விட்டார்கள். என்னுடைய பிறந்த நாளுக்காக பொதுக்குழுவே வருக என்று கட்சியினர் போஸ்டர் அடித்ததில் என்ன தவறு இருக்கு?. அவர்களையும் கட்சியில் இருந்து நீக்கினார்கள். மு.க.ஸ்டாலினுக்கு கூட "வருங்கால முதல்வரே" "வருங்கால முதல்வரே" வருக வருக என்று போஸ்டர் அடிக்கிறார்கள். மு.க.ஸ்டாலின் எந்நாளும் முதலமைச்சராக முடியாது. அதை நாங்கள் விட மாட்டோம். எனது ஆதரவாளர்கள் விட மாட்டார்கள்.
மதுரை நமது கோட்டை, இதை யாராலும் மாற்ற முடியாது. எத்தனையோ பேரை அமைச்சராக்கியுள்ளேன். ஆனால் ஒருவருக்கு கூட நன்றி இல்லை. மு.க.ஸ்டாலினுக்கு பொருளாளர் பதவியை வாங்கித்தந்ததே நான்தான்” என்றார்.
மேலும், மு.க.ஸ்டாலின் ஏன் எனக்கு துரோகம் செய்தார் என்று இதுவரை தெரியவில்லை. மு.க.ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவியை என்னிடம் கேட்டுத்தான் தலைவர் கருணாநிதி கொடுத்தார். தலைவர் கருணாநிதியிடம் எம்.பி பதவியோ, அமைச்சர் பதவியோ நான் கேட்கவில்லை, அவராக எனக்கு கொடுத்தது. தலைவர் கலைஞருக்கு நிகர் அவர் மட்டுமே. நான் என்ன முடிவெடுத்தாலும் அதனை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். எதையும் சந்திக்க தயாராக இருங்கள்” என்றார்.