மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்தும் டிராக்டர் பேரணி தொடங்கி உள்ளது. இதற்காக ஆயிரக்கணக்கான டிராக்டர்களுடன் விவசாயிகள் டெல்லியில் குவிந்துள்ளனர்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி பஞ்சாப், ஹரியாணா மாநில விவசாயிகள் டெல்லியின் எல்லைப் பகுதிகளில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக குடியரசு தினமான இன்று டெல்லியில் பிரம்மாண்ட டிராக்டர் பேரணி நடத்தப்படும் என்று விவசாயிகள் அறிவித்திருந்தனர்.
மத்திய அரசோடு நடந்த 11வது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்ததால் 62வது நாளான இன்று, டிராக்டர் பேரணியை விவசாயிகள் முன்னெடுத்து வருகின்றனர். இதனால் காவல்துறை தடுப்புகளை மீறி விவசாயிகளின் டிராக்டர் பேரணி டெல்லி, சிங்கு எல்லையில் தொடங்கி உள்ளது. இதையடுத்து, ஏராளமான விவசாயிகள் டிராக்டர்களில் பேரணி டெல்லி, ஹரியானா எல்லையான சிங்குவில் இருந்து தொடங்கினர். ஹரியானா எல்லையான சிங்குவில் இருந்து தொடங்கும் பேரணி கன்ஜாவாலா , பவானா , அவுசான்டி எல்லை , கே.எம்.பி.எக்ஸ்பிரஸ் வழியாக மீண்டும் சிங்குவை சென்றடையும்.
இதையடுத்து, 'திக்ரி எல்லையிலிருந்து தொடங்குகிற டிராக்டர் பேரணி நாக்லோ , நஜாப்கர் , மேற்கு எல்லைப் பகுதி எக்ஸ்பிரஸ் வே வழியாக மீண்டும் திக்ரியை சென்றடையும். டெல்லி - உத்தரப்பிரதேச எல்லையான 'காஜிப்பூர்' எல்லையில் இருந்து தொடங்கும் டிராக்டர் பேரணி குன்ட்லி , காஜியாபாத் , பல்வால் எக்ஸ்பிரஸ் வே வழியாக சென்று மீண்டும் காஜிப்பூரை அடையும்.
இதையடுத்து சுமார் 100 கிலோமீட்டருக்கு மேல் நடைபெறும் இந்த பேரணி மாலை ஆறு மணிக்கு முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில், பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகே டிராக்டர் பேரணிக்கு போலீசாரால் அனுமதி வழங்கப்பட்டது. எனினும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும், இன்று 72வது குடியரசு தின விழா டெல்லியில் நடைபெற்று வருவதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு இருக்கிறது.