சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் முகநூலில் தகவல் பரப்பியதாக கூறி பொள்ளாச்சியை சேர்ந்த திமுகவினர் இருவரை போலீஸார் கைது செய்தனர்.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை பிரச்சனை தேர்தல் வருவதால் அரசியலாக்கப்பட்டு வருகிறது. உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் போஸ்டரை போட்டோஷாப் சாப்ட்வேர் மூலம் எடிட்டிங் செய்து படுகேவலமாக ஆபாசமாக வார்த்தையை மாற்றி வலைதளங்களில் உலாவ செய்தார்கள். தற்போது, வேறொரு புகைப்படத்தை பயன்படுத்தி இதுதான் பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் என்று சமூக வலைத்தளங்களில் தவறாக பகிரப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அதிமுகவின் கோவை புறநகர் தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட இணைச்செயலாளர் சதீஷ்குமார் என்பவர் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அப்புகாரில், திமுக பொள்ளாச்சி நகர முரசொலி மன்ற துணைச்செயலாளர் நாகராஜ் மற்றும் திமுக உறுப்பினர் பொள்ளாச்சியை சேர்ந்த சுதர்ஷன் ஆகியோர்கள் முகநூல் பக்கத்தில் ஆபாசமான புகைப்படத்தை பதிவேற்றம் செய்தும், புகைப்படத்தில் இருப்பது தமிழ்நாடு சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமனின் மகன் என்றும் குறிப்பிட்டு அவருடைய நற்பெயரை கெடுக்கும் வகையில் பதிவேற்றம் செய்து உள்ளதாகவும் தெரிகிறது.
மேலும், 15ம் தேதி இரவு பொள்ளாச்சி பேருந்துநிலையம் அருகே திமுகவை சேர்ந்த இருவர் நின்றிருந்தபோது, சதீஷ்குமார் இருவரிடமும் ஏன் ஆதாரமில்லாமல் இதுபோன்ற வெளியிடுகிறீர்கள் என கேட்டதற்கு, மேற்படி இருவரும் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இது சம்மந்தமாக, கோவை மாவட்டம், பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், மேற்படி நாகராஜ் மற்றும் சுதர்சன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.