தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கும், இச்சூழலில் மறைந்த முன்னாள் முதல்வர் அம்மையார் செல்வி ஜெயலலிதா அவர்களின் நெருங்கிய தோழி அம்மையார் வி.கே.சசிகலா முன்கூட்டியே விடுதலை செய்ய விண்ணப்பித்துள்ளார்.
சொத்துகுவிப்பு வழக்கில் பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார். அண்மையில், அவர் விரைவில் விடுதலை செய்ய சிறைத்துறை அதிகாரிகளுக்கு விண்ணப்பித்ததாக தெரிவிக்கப்பட்டது.
சிறப்பு நீதிமன்றம் விதித்த அபராதத்தை செலுத்திய பின்னர், வி.கே.சசிகலா ஜனவரி 27ஆம் தேதியன்று பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து விடுவிக்கப்படவிருந்தார். ஆனால் அவர் முன்னத்தாகவே விடுதலை செய்ய விண்ணப்பித்தார். வி.கே.சசிகலா ஏற்கனவே 43 மாத சிறைவாசம் அனுபவித்துள்ளார். அதன்படி, வி.கே.சசிகலாவுக்கு 135 நாட்கள் சிறைவாசம் விதிக்கப்படும். அவரது நன்நடத்தை காரணமாக அவரை முன்னத்தாகவே விடுவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார். அவரது கோரிக்கை சிறைத்துறை அதிகாரிகளால் மேலதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டது. அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்ற நிலையில் இருக்கிறது.
வி.கே.சசிகலா விடுதலையானதும், தமிழக அரசியலில் பரபரப்பும், அதிரடியும் சூடுபிடிப்பது உறுதியான விசயம்தான். வி.கே.சசிகலாவின் வருகையை எதிர்பார்த்து காத்திருக்கும் தொண்டர்கள், மிக பிரம்மாண்டமாக வரவேற்க திட்டமிட்டு இருக்கிறார்கள். ஆளும் அதிமுக தலைவர்கள் வி.கே.சசிகலா விடுதலையின் அரசியல் விளைவுகள் குறித்து குழப்பத்தில் இருக்கிறார்கள்.
ஜனவரி 27 ஆம் தேதி விடுவிக்கப்படுவார் என்று வி.கே.சசிகலாவின் விசுவாசிகள் நம்புகின்றனர். வி.கே.சசிகலாவின் வருகையை அடுத்து அவரது விசுவாசிகள் சென்னையில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்திப்பு நடைபெறும். சிறையில் இருந்து நேராக மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் சமாதிக்கு செல்வதாகவும், அதன்பிறகு அவர் அதிமுகவை கைப்பற்றுவதற்கான வேலைகளில் ஈடுபடுவார் என்று தெரிகிறது. இதற்காக திட்டங்கள் டிடிவி.தினகரன் மூலமாக போட்டு வைத்திருக்கிறார் என்றெல்லாம் தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கிறது. சில மாதங்களில் வரவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் சூழலில் சசிகலாவின் வருகை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.
அதிமுக - அமமுக ஒருங்கிணைப்பு, அதிமுகவின் தலைமைப் பொறுப்பை வி.கே.சசிகலா ஏற்கவைப்பது என்றெல்லாம் யூகங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் அதிமுக, பாஜக இடையில் இணக்கமான சூழல் இல்லாத நிலையே தொடர்ந்தது வருகிறது. முதல்வர் வேட்பாளரை பாஜக கட்சி தலைமைதான் முடிவு செய்யும் அதிமுக அல்ல என்று பாஜகவினர் நெருக்கடி கொடுத்து வருகிறார்கள்.
நெருக்கடிக்கு பின்னணியில் தொகுதி ஒதுக்கீட்டில் அரசியல் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில்தான் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியிருப்பது கவனிக்கத்தக்கது. இதற்கான களமாக திருச்சியில் நடந்த கூட்டம் இருந்துள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், அதிமுக தலைமையில் தான் கூட்டணி. இந்த கூட்டணிக்குள் தான் பாஜக இருக்கிறது.
கடந்த தேர்தல்களில் கூட்டணியில் இருந்த கட்சிகள்தான் இப்போதும் இருந்து வருகிறது. அதிமுகவின் தலைமையை ஏற்கும் கட்சிகள்தான் எங்கள் கூட்டணியில் இருக்க முடியும். தேர்தல் நெருங்கும் நேரத்தில்தான் புதிய கட்சிகள் கூட்டணிக்குள் வருமா என்பது தெரியும். தேர்தலுக்கு பின்னரே கூட்டணி கட்சிகளின் கூட்டம் நடைபெறும். வி.கே.சசிகலா வெளியே வந்தால் என்ன நடக்கும் என்பதை இப்போது சொல்லமுடியாது.
ஆனால் எங்களைப் பொறுத்தவரை எந்த மாற்றமும் கிடையாது என்று தெரிவித்துள்ளார். இதன்மூலம் வி.கே.சசிகலா விவகாரத்திற்கு மட்டுமின்றி கூட்டணி தொடர்பான விஷயங்களுக்கும் முதல்வர் பழனிசாமி தீர்க்கமான முடிவை அளித்திருப்பதாக அரசியல் விவரம் தெரிந்தவர்கள் கூறுகின்றனர்.
 






 
 
 
 
 
 
 
 
 
