தமிழக முதல் அமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி மரணம் அடைந்தார். மெரினா கடற்கரையில் இருக்கும் எம்.ஜி.ஆர் சமாதி அருகில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடலை அடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்திலேயே ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்கவும் தமிழக அரசு முடிவு செய்தது.
பீனிக்ஸ் பறவை போன்ற வித்தியாசமான தோற்றத்தில் நினைவிடத்தை அமைக்க வடிவமைப்பு செய்யப்பட்டது. இதன் அடிக்கல் நாட்டு விழா 2018ஆம் ஆண்டு மே மாதம் 8-ந்தேதி நடந்தது. முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
சுமார் 50 கோடியே 80 லட்ச ரூபாய் செலவில் இத்தாலி நாட்டு மார்பிள், பளிங்கு கற்கள் ஆகியவை பதிக்கப்பட்டு இந்த நினைவிடம் அமைக்கப்பட்டது. பீனிக்ஸ் பறவை வடிவத்தில் ஜெயலலிதா நினைவிடம் உருவாக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, நினைவிடத்தை திறந்து வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், ஜெயலலிதா நினைவிடத்தை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வரும் 27ஆம் தேதி திறந்து வைக்க உள்ளார். இந்த விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுகவை சேர்ந்த முக்கிய தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்தநிலையில், ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவில் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்க உள்ளாரா? என்பது குறித்த தகவல் தற்போதுவரை உறுதியாகவில்லை.




