Type Here to Get Search Results !

‘கோவை பீளமேடு கணேஷா சில்க்ஸ் துணிக்கடைக்குச் சென்றவர்களுக்கு ரெட் அலர்ட்!' - ஆட்சியர் அறிவிப்பு

கோவை பீளமேடு டி.ஆர். கணேஷா சில்க்ஸ்  துணிக்கடைக்குச் சென்றவர்கள் தங்களை தாமாக முன்வந்து கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் இராசாமணி கூறியுள்ளார்.

கணேஷா சில்க்ஸ்  துணிக்கடை

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு தினசரி உச்சத்தைத் தொட்டுக்கொண்டிருக்கிறது. சென்னையைச் தொடர்ந்து, தமிழகத்தின் மற்ற நகரங்களிலும் பாதிப்பு சீரான வேகத்தில் அதிகரித்து வருகிறது. முக்கியமாக, கோவை மாநகர் பகுதிகளில் கொரோனா பாதிப்பு பரவலாகி வருகிறது.

இதுவரை இல்லாத வகையில் நேற்று மட்டும் கோவையில் 74 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கோவை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 435ஆக அதிகரித்துள்ளது.

வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து வருபவர்களால் மட்டுமல்லாமல், உள்ளூரிலேயே ஊரடங்கு உத்தரவு, தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்காததும் கொரோனா வைரஸ் பரவ முக்கிய காரணமாக இருக்கிறது. முக்கியமாக, பீளமேடு பாலன் நகர் பகுதியில் டி.ஆர். கணேஷா சில்க்ஸ்  என்ற துணிக்கடை இயங்கி வருகிறது. அந்தக் கடை ஊரடங்கு உத்தரவுகளைக் கடைப்பிடிக்காமல், இரவு 11 மணிவரை வியாபாரம் நடத்தி கல்லா கட்டியது.

கணேஷ் ஷா துணிக்கடை


வெளியூர்களில் இருந்து ஏராளமான வாடிக்கையாளர்கள் அந்தக் கடைக்கு வந்த நிலையில், தனிமனித இடைவெளியும் கடைப்பிடிக்கவில்லை. இதனால், அதிகாரிகள் அந்தக் கடைக்கு சீல் வைத்தனர்.

ஆனால், சீல் வைத்த அடுத்த நாளே அந்தக் கடை விதிகளை மீறி மீண்டும் இயங்கியது. இதனிடையே, அந்தக் கடையின் ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட, அடுத்தடுத்து அந்தப் பகுதியில் பலருக்கும் கொரோனா உறுதியானது. இதனால், அந்தப் பகுதி முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டது.

அந்தப் பகுதியில் கொரோனா பரவ முக்கிய காரணமாக, டி.ஆர். கணேஷா துணிக்கடை மீது, மாநகராட்சி நிர்வாகம் போலீஸில் புகார் அளித்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் இராசாமணி


இந்த நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் இராசாமணி வெளியிட்டுள்ள அறிக்கையில். “கடந்த மாதம் சின்னியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த நபர் சென்னை மற்றும் பிற பகுதிகளுக்கு சென்று வைரஸ் தொற்றுடன் அனுமதி பெறாமல் கோவை மாவட்டத்துக்குள் நுழைந்தார். தொடர்ந்து அவர் பல்வேறு பகுதிகளுக்குச் சென்றார்.

பிறகு, அந்த இளைஞருக்குத் தொற்று கண்டறியப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். ஆனால், அந்த நபர் மூலம் மட்டுமே 40–க்கும் மேற்பட்டோருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது.

கொரோனா பரிசோதனை

அதேபோல, கணேஷா சில்க்ஸ்  துணிக்கடை மூலம் 45 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அந்தக் கடைக்கு வெளிமாவட்டங்களிலிருந்தும் பலர் வந்துள்ளனர். எனவே, கடந்த மாதம் அந்தக் கடைக்கு வந்த அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு, தாமாக முன்வந்து கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

முக்கியமாக, கோவை மக்கள் அவசியமில்லாத காரணங்களுக்கு வெளியே வருவதைத் தவிர்ப்பதுடன், அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies