சர்ச்சையின் மையமாக மாறியுள்ள சாத்தான்குளம் விவகாரத்தில் தினமும் புதிய புதிய தகவல்கள் வெளியாகிக்கொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்திவருகிறது.
ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரும் சாத்தான்குளம் காவலர்களால் கைது செய்யப்பட்டு மர்மமான முறையில் மரணம் அடைந்தனர். அதன் தொடர்ச்சியாக மதுரை உயர் நீதிமன்றம் இந்த விவகாரத்தில் நேரடியாகத் தலையிட்டது.
இந்த விவகாரம் குறித்து நடுவர் நீதிமன்ற நீதிபதி பாரதிதாசன் சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் விசாரணை நடத்தச் சென்றபோது, அங்கு காவல்துறையினர் அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாக உயர் நீதிமன்ற பதிவாளரிடம் புகார் அளித்தார். தமிழக அரசும் சிபிஐ வசம் இந்த வழக்கை ஒப்படைத்துள்ளது. அதற்கு முன்பாக சி.பி.சி.ஐ.டி காவல்துறை இந்த வழக்கில் விசாரணை மேற்கொண்டுவருகிறது.
இந்த வழக்கில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஆய்வாளராக இருந்த ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், மற்றும் நான்கு காவலர்களை சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர்.
இவர்களைத் தவிர, அந்த காவல் நிலையத்தில் பணிபுரிந்த அனைத்து காவலர்களையும் விசாரணையும் செய்துவருகிறார்கள். பென்னிக்ஸ், அவர் தந்தை ஜெயராஜ் ஆகியோரை கடையிலிருந்து காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தது யார்... இரவு முழுவதும் இருவரையும் விசாரிக்கச் சொல்லி அழுத்தம் கொடுத்தது எந்த அதிகாரி என்றும் விசாரணை நடந்துவருகிறது.
இந்த விவாகரத்தில் புதிய தகவல் ஒன்றும் இப்போது வலம் வந்து கொண்டிருக்கிறது. பென்னிக்ஸ், ஜெயராஜ் ஆகிய இருவரும் கடையை மூடாமல், காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுதான் கைது செய்யக் காரணம் என்று சொல்லப்படுகிறது. ஆனால், அதைத்தாண்டி மற்றொரு காரணமும் இருந்துள்ளது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.


