சாத்தான்குளம் வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்ரீதர், சிறைக்குக் கொண்டுசெல்லப்பட்டது முதலே தனது அதிகாரத்தை சிறை அதிகாரிகளிடம் காட்டி மிரட்டியிருக்கிறார்.
சாத்தான்குளம் வியாபாரிகள் இருவர் இறந்த வழக்கில் கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் சிறையிலும் தனது அதிகார தோரணை காட்டியதால் அதிர்ந்து போன சிறை அதிகாரிகள் அவரை மதுரை சிறைக்கு மாற்றியுள்ளனர்.
சாத்தான்குளம் வர்த்தகர்களான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு மர்மமான முறையில் மரணம் அடைந்தனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மரணம் குறித்து தற்போது சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சாத்தான்குளம் காவல்துறை ஆய்வாளராக இருந்த ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கண்ணன், உள்ளிட்ட ஐந்து பேரை சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கு விவகாரத்தில் முதலில் ஆய்வாளர் ஸ்ரீதர் பெயர் சேர்க்கப்படவில்லை. தனது பெயர் எப்படியும் இந்த வழக்கில் சேர்க்கப்படும் என்பதை அறிந்த ஸ்ரீதர் தனக்கு நெருக்கமான ஆளும்கட்சி முக்கிய பிரமுகர் ஒருவரிடம் தஞ்சம் அடைய முடிவு செய்துள்ளார்.
அதோடு ஆளும்கட்சியின் ஆசியுடன் இந்த வழக்கிலிருந்து விடுபட்டு விடவும் திட்டமிட்டார். ஆனால், உயர் நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் இந்த வழக்கு விசாரணை நடந்ததால் ஆய்வாளர் ஸ்ரீதர் மீது வழக்கு பதிவு செய்தது சி.பி.சி.ஐ.டி காவல்துறை. தன்னை கைது செய்யாமல் இருக்க, தனது சொந்த மாவட்டமான தேனிக்குச் செல்லும் வழியில் சி.பி.சி.ஐ.டி காவலர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டார் ஸ்ரீதர்.


