Type Here to Get Search Results !

"சசிகலா வருகை": வாய்ப்பேயில்லை-இபிஎஸ்... பரிசீலிப்போம் - ஓபிஎஸ்... குழப்பத்தில் அதிமுக தொண்டர்கள்

"சசிகலா வருகை": வாய்ப்பேயில்லை-இபிஎஸ்... பரிசீலிப்போம் - ஓபிஎஸ்...  குழப்பத்தில் அதிமுக தொண்டர்கள்  


அதிமுகவில் வி.கே.சசிகலாவை சேர்ப்பதை பற்றி தலைமை நிர்வாகிகள் சேர்ந்து முடிவு எடுப்பார்கள் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அறிவித்து இருக்கிறார். இவரின் இந்த பேட்டி அதிமுகவில் மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக மிகப்பெரிய மாற்றத்தை எதிர்நோக்கி உள்ளதோ என்ற கேள்வியை இந்த பேட்டி எழுப்பி உள்ளது.


சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த வி.கே.சசிகலா வெளியே வந்ததும் கட்சியை மீட்பார், அதிமுகவிற்குள் கலகம் ஏற்படுத்துவார் என்றுதான் அரசியல் விமர்சகர்கள் தொடங்கி அதிமுக நிர்வாகிகள் வரை பலர் நினைத்தனர். ஆனால் சிறையில் இருந்து வெளியே வந்த வி.கே.சசிகலா திடீரென ஜென் நிலைக்கு சென்றார். அத்தோடு, அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதாகவும் அறிக்கை வெளியிட்டார்.



ஒதுங்கி இருக்கிறேன் என்று அறிவித்தாரே ஒழிய அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என்று வி.கே.சசிகலா அறிவிக்கவில்லை. தேர்தல் நேரத்தில் அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்த கூடாது, அதிமுகவின் வெற்றியை தான் தடுக்க கூடாது என்பதால் வி.கே.சசிகலா இப்படி செய்கிறார் என்றுதான் அப்போது கூறப்பட்டது. சசிகலாவின் அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கைகளும் அப்படியே சென்றன.


சசிகலா


தேர்தல் முடிந்த பின் கொஞ்சம் கொஞ்சமாக காய் நகர்த்திய வி.கே.சசிகலா முதலில் ஆடியோ வெளியிட்டு அதிமுக தலைவர்களை சீண்டினார். அதன்பின் சுற்றுப்பயணம் மேற்கொள்ள போவதாக அறிவித்த வி.கே.சசிகலா.. பின்னர் கிடைத்த இடங்களில் எல்லாம் கட்சியை மீட்பேன். கட்சியில் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். நமக்கு நாமே எதிரியாக இருக்க கூடாது. நமக்கு திமுகதான் எதிரி என்றெல்லாம் குறிப்பிட்டார். அதன்பிறகு வேகமான வி.கே.சசிகலா அதிமுகவை மீண்டும் எப்படியாவது தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவேண்டும் என்று முயன்று கொண்டு இருக்கிறார். வி.கே.சசிகலா கழக பொதுச்செயலாளர் என்ற பெயரில் இவர் அறிக்கை வெளியிட்டு வருகிறார்.



எடப்பாடி எதிர்ப்பு


அதோடு வி.கே.சசிகலா கழக பொதுச்செயலாளர் என்று பெயர் பொறிக்கப்பட்ட காரில், அதிமுக கொடி தாங்கி இவர் அதிமுக பொன் விழாவின் போது எம்ஜிஆர் நினைவு இல்லத்திற்கும், ஜெயலலிதா சமாதிக்கும் என்று மரியாதை செலுத்தினார். அதிமுக கட்சியை மீட்பேன் என்றும் வி.கே.சசிகலா தொடர்ந்து பேசி வருகிறார். ஆனால் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி எந்த இடத்திலும் வி.கே.சசிகலாவிற்கு கொஞ்சம் கூட ஆதாரவாக கருத்து தெரிவிக்கவில்லை. சசிகலாவிற்கு அதிமுகவில் இடமே இல்லை என்று எடப்பாடி திட்டவட்டமாக கூறி வருகிறார்.




கடுமை


வி.கே.சசிகலா மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்போம். அதிமுகவிற்கும் வி.கே.சசிகலாவிற்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை. வி.கே.சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளர் என்று கூறிவதற்கு எதிராக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்போம். அவருக்கு எதிராக காவல்நிலையத்தில் புகார் கொடுப்போம். அவங்க சொல்வதை சொல்லிட்டு போறாங்க.. எங்களுக்கு என்ன பயம், "சூரியனைப் பார்த்தது"...... என்று கூறி மிக மோசமான வார்த்தைகளால் கூட வி.கே.சசிகலாவை எடப்பாடி கே.பழனிசாமி விமர்சனம் செய்தார்.




ஆனால் ஓபிஎஸ் அமைதி


எடப்பாடி கே.பழனிச்சாமி, கே.பி.முனுசாமி, டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம் உள்ளிட்டவர்கள் வி.கே.சசிகலாவை கடுமையாக எதிர்த்த நிலையில், ஓபிஎஸ் மட்டும் இதில் அமைதியாகவே இருந்தார். வி.கே.சசிகலாவிற்கு எதிராக பேசுவதை அவர் தவிர்த்து வந்தார். வி.கே.சசிகலா ஜெயலில் இருந்து வந்தபோதே அவரை பற்றி நட்பாக பேசியவர் ஓ.பி.எஸ். வி.கே.சசிகலா மீது எனக்கு கோபமோ, எதிர்ப்போ இல்லை என்று கூறியவர் ஓ.பி.எஸ். ஆனால் எங்கும் வி.கே.சசிகலாவை ஓ.பி.எஸ் வெளிப்படையாக ஆதரிக்காமல் அமைதி காத்து வந்தார். தனது மனைவி விஜயலட்சுமி மரணத்தில் வி.கே.சசிகலா ஓபிஎஸ்ஸை சந்தித்தது.. முக்கிய நிகழ்வாக அமைந்தது.


இப்போது செக் வைத்துள்ளார்


இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிச்சாமி அண்ட் கோவிற்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக ஓ.பி.எஸ் - வி.கே.சசிகலா குறித்து பேட்டி அளித்துள்ளார். இன்று அவர் அளித்த பேட்டியில், வி.கே.சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து கட்சி தலைமை கழக நிர்வாகிகள் சேர்ந்து முடிவு எடுப்பார்கள். அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அவர்களை ஏற்றுக்கொள்வதும், கொள்ளாததும் மக்களின் விருப்பம். அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற அடிப்படையிலேயே செயல்பட்டு வருகிறது, என்று ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார்.




ஓரம் கட்டப்பட்டார்


அதாவது வி.கே.சசிகலாவை கட்சிக்குள் சேர்ப்பது குறித்து பரிசீலிப்போம் என்று ஓ.பி.எஸ் தெரிவித்துள்ளார். இவரின் இந்த பேட்டி அதிமுகவில் மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. ஓ.பி.எஸ் கடந்த சில மாதங்களாக கட்சிக்குள் எடப்பாடி மற்றும் அவரது ஆதரவாளர்கள் மூலம் ஓரம்கட்டப்பட்டு வந்தார். அதிமுக ஒருங்கிணைப்பாளராக இருந்தாலும்கூட கட்சி கூட்டங்களில் பெரிய அளவில் அவருக்கு முடிவு எடுக்கும் அதிகாரம் இல்லை. எதிர்கட்சித் தலைவர் பதவியை தேர்வு செய்வது தொடங்கி கட்சியின் முக்கியமான முடிவுகள் பலவற்றில் இபிஎஸ் தரப்பின் கையே ஓங்கி இருந்தது.


 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies