சசிகலாவின் அரசியல் சுற்றுப்பயணம்: அதிமுகவில் ஆதரவான அலை... அதிமுக தொண்டர்களின் மனநிலை என்ன ?
வி.கே.சசிகலா தஞ்சாவூர், திருநெல்வேலி, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். அரசியல்ரீதியாக வி.கே.சசிகலா மேற்கொள்ளும் முதல் சுற்றுப்பயணம் இதுதான்.
சமீபத்திய வி.கே.சசிகலா குறித்த ஓபிஎஸ்ஸின் கருத்துக்கு பிறகு, ஒட்டுமொத்த அதிமுக தொண்டர்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில், வி.கே.சசிகலாவின் இந்த சுற்றுப்பயணம் என்னமாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பற்றி பார்ப்போம்...
பெங்களூரு சிறையிலிருந்து ஆரவாரமாக திரும்பிய பின்னர், அதிரடி அரசியலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வி.கே.சசிகலா அமைதியாகிப்போனார். சட்டமன்ற தேர்தல் நெருக்கத்தில் அனைவரும் ஒற்றுமையாக இருந்து, அதிமுகவை வெற்றிபெற வைக்கவேண்டும் என்பதற்காக தான் அரசியலிலிருந்து ஒதுங்கிக்கொள்வதாகவும் அறிவித்து பரபரப்பை உருவாக்கினார் வி.கே.சசிகலா.
சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றிபெற்று, அதிமுக தோல்வியை சந்தித்ததால், மீண்டும் தனது அரசியல் ஆட்டத்தை ஆடியோ மூலமாக தொடங்கினார். பல அதிமுக, அமமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் பேசி அவர் எடுத்த ஆடியோ அஸ்திரம் வி.கே.சசிகலாவிற்கு ஓரளவு பலனையும் கொடுத்தது. ஆனாலும் இபிஎஸ் தரப்பில் இருந்து சசிகலாவை அதிமுகவில் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை என்று தொடர்ந்து சொல்லப்பட்டு வந்தது. ஆடியோவில் பேசியவர்களையும் நீக்கும் படலமும் உடனடியாகவே நடந்து முடிந்தது.
அதிமுகவின் பொன்விழா ஆண்டில் வெடித்த பூகம்பம்:
மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரால் 1972 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அதிமுகவுக்கு இது பொன்விழா ஆண்டு. இதனை கொண்டாட அதிமுக தரப்பில் திட்டமிடப்பட்டது. இந்தநிலையில்தான், வி.கே.சசிகலா தனது புதிய அதிரடியை தொடங்கினார்.
அக்டோபர் 16-ஆம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய வி.கே.சசிகலா, பொன்விழா ஆண்டு தொடங்கிய 17-ஆம் தேதி ராமவரத்தில் உள்ள எம்ஜிஆர் இல்லத்தில் கொடியேற்றியதுடன், அதிமுக பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா என்ற பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டையும் தொடங்கிவைத்தார்.
அப்போது அங்கே பேசிய வி.கே.சசிகலா, நீர் அடித்து நீர் விலகாது – பிரிந்த அனைவரும் ஒன்றிணைந்து அதிமுகவை ஆட்சிக்கட்டிலில் அமரவைக்கவேண்டும் என்று தெரிவித்தார். ஆனால், அதற்கு பிறகும்கூட, இ.பி.எஸ், கே.பி.முனுசாமி மற்றும் டி.ஜெயக்குமார் ஆகியோர் வி.கே.சசிகலா மீது காட்டமான விமர்சனத்தையே முன்வைத்து வருகின்றனர்.
இந்தநிலையில்தான், சில நாட்களுக்கு முன்னர் பேசிய ஓ.பன்னீர்செல்வம், வி.கே.சசிகலாவை அதிமுகவில் இணைப்பது குறித்து தலைமை நிர்வாகக்குழுவில் பேசி முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தார். ஓ.பி.எஸ்ஸின் இந்த பேச்சு, தமிழக அரசியல் அரங்கில் தொடர்ச்சியாக பல அதிர்வலைகளை உருவாக்கியது.
இந்தநிலையில், வி.கே.சசிகலா தனது அரசியல் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். வி.கே.சசிகலாவை அதிமுகவில் இணைத்தால் கட்சி பலம்பெறும் என்று, அனைத்து தரப்பு அதிமுக தொண்டர்களிடம், மனநிலை உருவாகியிருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். வரயிருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வெற்றிபெற வேண்டுமென்றால் அனைவரையும் ஒருங்கிணைப்பது அவசியம் என்று அதிமுக தொண்டர்கள் விரும்புவதாக தெரிவிக்கின்றனர்.
வி.கே.சசிகலா வந்தால்தான் வெற்றிபெறலாம் என்பதே தொண்டர்கள் மனநிலை:
வி.கே.சசிகலாவின் இந்த சுற்றுப்பயணம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து பேசும் மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன், ஏற்கனவே சட்டமன்ற தேர்தல் தோல்வியில் துவண்டு போயிருந்த அதிமுக தொண்டர்கள், ஊரக உள்ளாட்சி தேர்தல் தோல்வியால் திக்குத்தெரியாத நிலையில் இருக்கிறார்கள்.
பொன்விழா ஆண்டு கொண்டாட வேண்டிய இப்போதும்கூட கட்சி இ.பி.எஸ்–ஓ.பி.எஸ்–வி.கே.சசிகலா என்று மூன்று பிரிவாக பிரிந்துகிடப்பது குறித்து அதிமுக தொண்டர்கள் கவலையில் இருக்கிறார்கள்.
இ.பி.எஸ்ஸின் கீழ் இருப்பதை விட, வி.கே.சசிகலாவுடன் இணக்கமாக செல்லலாம் என்று ஓ.பி.எஸ் நினைக்கிறார். வி.கே.சசிகலாவை கட்சிக்குள் கொண்டுவந்தால் தங்கள் இருப்புக்கு ஆபத்து வந்துவிடும் என்று எடப்பாடி குழுவினர் நினைக்கின்றனர். அதனால், இ.பி.எஸ் தொடர்ச்சியாக அதிமுகவில் வி.கே.சசிகலா வேண்டாம் என்கிறார்.
ஆனால், ஒ.பி.எஸ் தற்போது வி.கே.சசிகலாவை இணைப்பதில் ஆதரவான சைகையை காட்டியுள்ளார். ஓ.பி.எஸ்ஸின் இந்த கருத்துக்கு அதிமுகவினரிடையே ஆதரவு அதிகரித்து வருகிறது என்பதுதான் உண்மை.
அதிமுக தொண்டர்களின் நோக்கம் என்னவென்றால், அதிமுக வெல்லவேண்டும், இரட்டை இலை சின்னம் வெல்லவேண்டும் என்பதுதான். இதற்காகவே அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அதிமுக தொண்டர்கள் விரும்புகின்றனர். கட்சியில் உள்ள பெரும்பாலான நிர்வாகிகளின் கருத்தாகவும் இதுதான் உள்ளது.
இந்தநிலையில், கடந்த சில தேர்தல்களின் தோல்வி மூலமாக அதிமுகவிற்கு வெற்றியை கொண்டுவரும் ஆளுமைத்தன்மை ஓ.பி.எஸ்–இ.பி.எஸ் இருவரிடமுமே இல்லை என்று அதிமுக தொண்டர்கள் நினைக்கிறார்கள்.
அடுத்தடுத்த தேர்தல்களில் கட்சி வெற்றியை பெறவேண்டும் என்றால், தேர்தல் வெற்றி குறித்த அனுபவமுள்ள வி.கே.சசிகலா வந்தால்தான் நல்லது என்றும் விரும்புகின்றனர். வி.கே.சசிகலாவை கட்சியில் இணைத்தால்தான் அதிமுக–அமமுக இணைந்து பலம் வாய்ந்த கட்சியாக அதிமுக மாறும் என்பது உண்மை.
இப்படியெல்லாம் அடிமட்ட தொண்டர்கள் சிந்திக்க தொடங்கியுள்ளனர். எனவே, வி.கே.சசிகலாவின் இந்த சுற்றுப்பயணம் என்பது நிச்சயமாக அதிமுகவில் பெரிய தாக்கத்தை உருவாக்கும். அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ வி.கே.சசிகலாவை சந்திக்க வாய்ப்பு இருக்கிறது.
அதிமுகவில் வி.கே.சசிகலாவிற்கு ஆதரவான அலை உருவாகியிருப்பது என்பது கண்கூடாக தெரிகிறது. அதற்கு அச்சாரம் இடுவதாக இந்த சுற்றுபயணம் அமையும்.