Type Here to Get Search Results !

பெண் ஐபிஎஸ் அலுவலருக்கு பாலியல் தொல்லை : சிறப்பு டிஜிபி விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என குற்றச்சாட்டு!

பெண் ஐபிஎஸ் அலுவலருக்கு பாலியல் தொல்லை - சிறப்பு டிஜிபி விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என குற்றச்சாட்டு!


பெண் ஐபிஎஸ் அலுவலருக்கு பாலியல் தொல்லை அளித்தது தொடர்பான விசாரணையை தாமதப்படுத்த சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி, தொடர்ந்து முயற்சி செய்வதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.


சென்னை அக். 22.,


சென்னை: பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்ததாக, சிறப்பு டிஜிபி, இடைநீக்கம் செய்யப்பட்டார். அவர் மீதான புகார் குறித்து விசாரிக்க, பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் தடுப்பு சட்டப்படி, கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் ஐந்து பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.


இந்த குழு விசாரணையை முடித்து ஏப்ரல் மாதத்தில் அரசுக்கு அறிக்கை அளித்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில் சிறப்பு டிஜிபிக்கு எதிராக குற்ற குறிப்பாணையும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விசாகா குழு விசாரணை நடவடிக்கைகளை ரத்து செய்யக் கோரி இடைநீக்கம் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.




விசாகா குழு விசாரணைக்கு எதிராக மனு


அந்த மனுவில், விசாரணை குழுவில் இடம் பெற்றுள்ள கூடுதல் டிஜிபி சீமா அகர்வால், ஐ.ஜி. அருண் ஆகியோர் தனக்கு எதிராக ஒருதலைபட்சமாக செயல்படுவார்கள் என்பதால், இருவரையும் நீக்க கோரி உள்துறை செயலருக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த மனு பரிசீலிக்கப்படும் முன்பே விசாரணை தொடங்கிவிட்டதாக இடைநீக்கம் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி குற்றஞ்சாட்டியுள்ளார்.


சாட்சிகள் பலர், புகாரளித்த பெண் ஐ.பி.எஸ் அலுவலருக்கு கீழ் பணியாற்றுபவர்கள் என்பதால், அவரை இடமாற்றம் செய்யக் கோரியும், அது ஏற்புடையதாக இருக்காது எனவும் தெரிவித்துள்ளார்.


பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லை தடுப்புச் சட்டப்படி இயற்கை நீதியை பின்பற்றி முறையாக விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார்.


இந்த மனு இன்று நீதிபதி சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இடைநீக்கம் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி தரப்பில் விசாகா கமிட்டி விசாரணையில் சாட்சிகளிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அறிக்கை தனக்கு தரப்படவில்லை என்றும், பாரபட்சமான விசாரணை நடைபெறுவதாகவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


விசாரணையை தாமதப்படுத்த முயற்சி


இதற்கு, பதிலளித்த அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், ஏற்கனவே இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், வேறு மாநிலத்துக்கு மாற்றக் கோரி இடைநீக்கம் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் நிராகரித்து விட்டதையும் சுட்டிக்காட்டினார். கமிட்டியில் உள்ள அருண் என்ற அலுவலர் மாற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.


மேலும், தனக்கு எதிரான விசாரணையை, மனுதாரர் தாமதப்படுத்த தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, இந்த வழக்கில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.


இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி சரவணன், விசாகா கமிட்டி விசாரணையின் ஏற்கனவே உள்ள நிலை நீடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, இரண்டு வாரத்திற்குள் தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளார்.


சிறப்பு டிஜிபி பாலியல் வழக்கு


முதலமைச்சரின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் ஐஏஎஸ் (காவல் கண்காணிப்பாளர்) அலுவலருக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறப்பு டிஜிபி மீது விழுப்புரம் சிபிசிஐடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.


புகார் கொடுக்கவிடாமல் தடுத்த காவல் கண்காணிப்பாளர் ஒருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக சிபிசிஐடி காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதனிடையே பணியிடத்தில் பெண் காவல் கண்காணிப்பாளர் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக விசாரணை நடத்த விசாகா குழு அமைக்கப்பட்டது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies