திண்டுக்கலில் மத நல்லிக்கணக்கத்தை வலியுறுத்தும் விதமாக நடந்த கந்தூரி விழாவில் 20 ஆயிரம் பேருக்கு கைமா பிரியாணி வழங்கப்பட்டது.
திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் உள்ள நாகல்நகர் பள்ளிவாசலில், ஆண்டுதோறும் நபிகள் நாயகத்தின் பிறந்தநாளையொட்டி, கந்தூரி விழா நடைபெறு வழக்கம். அன்றைய தினம் சர்வமத ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக மெகா பிரியாணி விருந்து நடைபெறும். இதன்படி, நடப்பு ஆண்டிற்கான கந்தூரி விழா நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு சுமார் 20 ஆயிரம் பேருக்கு பிரியாணி வழங்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக சுமார் இரண்டரை டன் அளவிலான அரிசி, 1000 கிலோ ஆட்டு இறைச்சி மற்றும் பல நூறு கிலோ அளவிலான தக்காளி, கத்தரிக்காய் உள்ளிட்ட காய்கறிகளை கொண்டு கைமா பிரியாணி தயாரிக்கப்பட்டது. மேலும், பிரியாணியுடன் வழங்க 35 ஆயிரம் முட்டைகளும் அவிக்கப்பட்டது.
முன்னதாக, பிரியாணியை பெறுவதற்காக திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் உள்ள நாகல் நகர், பாரதிபுரம், பர்மாகாலனி, வேடப்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 20 ஆயிரம் பேருக்கு டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, இன்று காலை 6.30 மணிக்கு கைமா பிரியாணி வழங்கும் பணி தொடங்கியது.
இந்த பணியில் 100-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் ஈடுபட்டனர். அப்போது, சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு நீண்ட வரிசையில் காத்திருந்த அனைத்து மத பொதுமக்கள், தாங்கள் கொண்டு வந்த பாத்திரங்களில் கைமா பிரியாணியை பெற்றுச் சென்றனர். இதனையொட்டி, நாகல் நகர் பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


