பிளஸ்2 தேர்வு தொடங்கும் மே 3-ஆம் தேதிக்குள், தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், மே 3-ஆம் தேதி பிளஸ்2 பொதுத்தேர்வு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் , மே 2க்குள் சட்டப் பேரவைத் தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதையடுத்து, மே 3ஆம் தேதிமுதல் மே 21-ஆம் தேதிவரை பிளஸ்2 தேர்வு நடப்பதால் அதற்கு முன்னதாகவே வாக்கு எண்ணிக்கையும் நடந்து முடிந்துவிடும் என்று தெரிகிறது.
தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தலை ஏப்ரல் இறுதி வாரத்தில் நடத்த வேண்டும் என்று அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் ஏற்கனவே, இந்திய தேர்தல் ஆணையர் சுனில் அரோராவிடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, பள்ளிகளில்தான் பெரும்பாலும் வாக்குச்சாவடிகள் ஆக இருக்கும் என்பதால் அதற்கு முன்னதாகவே தேர்தல் நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.
இதில், பிளஸ்2 பொதுத் தேர்வு தேதி அறிவிப்பு குறித்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் பிளஸ்2 பொதுத்தேர்வு தேதி அறிவித்ததில் எந்த குழப்பமும் இல்லை என்று தெரிவித்துள்ளார். இதனால், தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் இறுதி வாரத்தில் நடக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கூறி வருகின்றனர்.


