சசிகலா விடுதலையவதை காலதாமதப்படுத்த சிறைநிர்வாகம் சதித்திட்டம் தீட்டுவதாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பெங்களூர் காவல்துறை ஆணையருக்கு இமெயில் மூலம் புகார் ஒன்றை சசிகலாவின் ஆதரவாளர் ராஜராஜன் என்பவர் அனுப்பியுள்ளார். அதில், சசிகலா விடுதலையை காலதாமதப்படுத்த சிறைநிர்வாகம் சதித்திட்டம் தீட்டுகிறது. இதனால், பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறை நிர்வாகம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனிடையே, பெங்களூர் சிறையில் இருந்து விடுதலையாகும் சசிகலா பிப்ரவரி முதல் வாரத்தில் தமிழகம் வருவார் என தகவல் வெளியாகியுள்ளது. நாளை மறுநாள் சசிகலா விடுதலையாவதால், அதற்கான சிறைத்துறை நடைமுறைகள் தொடங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வரும் சசிகலா மருத்துவமனையில் இருந்தபடியே விடுதலையாவார் என சசிகலாவின் உறவினர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில், கடந்த 20ஆம் தேதி உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சசிகலாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அங்கு அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.