மனிதனுக்கு நெருக்கமான காட்டு விலங்கு ஒன்று இருக்கமென்றால் அது யானைதான். ஆதிகாலங்களில் இருந்தே சமவெளிகளில் மனிதர்கள் யானைகளுடன் இணைந்தே வாழ்ந்து வந்துள்ளார்கள் என்பதற்கு இலக்கியங்கள் பல உதாரணமாகவும் சாட்சியாகவும் கூறப்பட்டிருக்கிறது.
இதில், தென்னகத்தில் தமிழகம் மற்றும் கேரளாவில் பல கோயில்களில் யானைகள் இருக்கிறது. இதில், கேரளாவில் யானைகளுக்கு இருக்கும் முக்கியத்துவம் மிக அதிகம். அந்தளவுக்கு யானைகள் மனிதனின் வாழ்க்கையில் கலந்தது.
மகிழ்ச்சியாக யானைகளை கொண்டாடும் நிலத்தில்தான் சோகங்களும் நிகழ்ந்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த ஆறு ஆண்டுகளில் மட்டும் 561 யானைகள் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சித்தகவல் வெளியாகி இருக்கிறது. இதையடுத்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்ட கேள்வியில் இந்த தகவல் அம்பலமாகி இருக்கிறது.
சென்னையைச் சேர்ந்த வன உயிரின ஆர்வலர் ஆண்டனி ரூபின் என்பவர் தமிழ்நாட்டில் யானைகள் உயிரிழப்பு தொடர்பாக சென்னை பனகல் மாளிகையில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேள்வி கேட்டிருந்தார். அதற்கு வனத்துறை சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 2015ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் 61 யானைகள் உயிரிழந்துள்ளன. 2016ஆம் ஆண்டு 98 யானைகளும், 2017ஆம் ஆண்டு 125 யானைகளும், 2018ஆம் ஆண்டு 84 யானைகளும், 2019ஆம் ஆண்டு 108 யானைகளும் மற்றும் 2020ஆம் ஆண்டு செடம்பர் வரை 85 யானைகள் உயிரிழந்துள்ளன.
கடந்த 6 ஆண்டுகளில் மொத்தம் 561 யானைகள் உயிரிழந்துள்ளன. கடந்த 6 ஆண்டுகளில் அதிகபட்சமாக ஈரோடு மண்டலத்தில் 167 யானைகளும், கோவை மண்டலத்தில் 134 யானைகளும் தர்மபுரி மண்டலத்தில் 89 யானைகளும் உயிரிழந்துள்ளதாக வனத்துறை குறிப்பிட்டுள்ளது.
6 ஆண்டுகளில் இறந்தவற்றில் 161 யானைக்குட்டிகளும் அடக்கம். கடந்த ஆண்டு ஜூலை மாதம் வரை 7 யானைகள், சட்டவிரோதமாக அமைத்த மின்வேலியில் சிக்கி உயிரிழந்துள்ளன.
காட்டுயானைகள் இப்படி கொத்துக்கொத்தாய் இறப்பதற்கு என்னதான் காரணம்? வனத்துறை என்னதான் செய்கிறது? வனத்துறையை தடுப்பது யார்?
வனப்பகுதிகளில் யானைகளின் வாழ்விட பரப்பு குறைவது, வலசைப்பாதைகள் ஆக்கிரமிப்பு, உணவுப் பற்றாக்குறை, நீர் மாசுபடுதல், சட்டவிரோத மின் வேலிகள், வேட்டை, ரயில் மற்றும் வாகன விபத்துகள் போன்றவற்றால் யானைகள் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. யானைகளின் வாழ்விடங்களை மனிதர்களாகிய நாம் அழிக்க அழிக்க மனிதயினம் அழிவிற்கு வழிவகுத்து வருகிறது.
யானைகளின் அழிவென்பது வனத்தை அழிக்கும் முயற்சி என்பதால் யானைகளை காக்க, வானத்தை காக்க மத்திய, மாநில அரசுகள் சிறப்பு கவனம் செலுத்தி போர்க்கால நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய மிகப்பெரிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. வனத்திற்கும் வனவிலங்குகளுக்கும் அழித்தல், துன்புறுத்துதல் என்ற பிரிவுகளில் தண்டனைகள் கடுமையாக்கப்படவேண்டும்.






