எனது உடல்நிலையை கருத்தில் கொண்டு, தான் கட்சி துவங்கவில்லை என்றும், அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்வதாகவும் நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் உறுதியாக அரசியலுக்கு வருவதாகவும், கட்சி துவக்கம், கொடி உள்ளிட்ட அறிவிப்புகள் குறித்து வரும் டிசம்பர் 31ஆம் தேதி அறிவிக்க உள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தார். இதற்கிடையில் உடல்நலக்குறைவு காரணமாக ஐதராபாத்தில் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பிய ரஜினியிடம், கட்டாயம் ஓய்வெடுக்கும்படி டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இந்த சூழ்நிலையில், தான் அரசியல் கட்சி துவங்கப்போவதில்லை என இன்று அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக ரஜினி தனது டுவிட்டரில் வெளியிட்ட அறிவிப்பு:
என்னை வாழவைக்கும் தெய்வங்களான தமிழக மக்களுக்கு எனது அன்பான வணக்கம். ஜனவரியில் கட் தொடங்குவேன் என்று அறிவித்து மருத்துவர்களின் அறிவுரையையும் மீறி 'அண்ணாத்த' படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஐதராபாத் சென்றேன். கிட்டத்தட்ட 120 பேர் கொண்ட படக்குழுவினருக்கு தினமும் கொரோனா பரிசோதனை செய்து கட்டுப்பாட்டோடு இருந்தும் 4 பேருக்கு கொரோனா இருக்கிறது என்று தெரியவந்தது. உடனடியாக இயக்குனர் படப்பிடிப்பை நிறுத்தி, என்னை உட்பட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்வித்தார்.
எனக்கு கொரோனா நெகடிவ் வந்தது. ஆனால் எனக்கு இரத்தக் கொதிப்பில் அதிக ஏற்றத் தாழ்வு இருந்தது. மருத்துவ ரீதியாக எக்காரணத்தைக் கொண்டும் எனக்கு இரத்தக் கொதிப்பில் தொடர்ந்து ஏற்றத் தாழ்வு இருக்கக் கூடாது. அது என்னுடைய மாற்று சிறுநீரகத்தை கடுமையாக பாதிக்கும். ஆகையால் என்னுடைய மருத்துவர்களின் அறிவுரைப்படி அவர்களின் மேற்பார்வையில் மூன்று நாட்கள் மருத்துவமனையில் கண்காணிப்பில் இருக்க நேரிட்டது.
— Rajinikanth (@rajinikanth) December 29, 2020







