பொள்ளாச்சி. நவ. 17.
ஆழியாறு அணை வேட்டைகாரன்புதூர் கால்வாயில் செவ்வாய்க்கிழமை உடைப்பு ஏற்பட்டுள்ளது.
பிஏபி தொகுப்பு அணைகளில் முக்கிய அணையான ஆழியாறு அணையிலிருந்து பழைய ஆயக்கட்டில் 6400 ஏக்கரும் புதிய ஆயக்கட்டில் 44 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகின்றன. புதிய ஆயக்கட்டில் உள்ள வேட்டைகாரன்புதூர் கால்வாய்க்கு செவ்வாய்க்கிழமை காலை தண்ணீர் திறக்கப்பட்டது.
தண்ணீர் திறக்கப்பட்டு சில மணி நேரத்தில் கால்வாய் துவங்கும் ஐந்தாவது கிலோ மீட்டர் தூரத்தில் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் பாசனத்திற்கு வழங்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் உடைப்பு ஏற்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
வேட்டைகாரன்புதூர் கால்வாயில் 5 ஆயிரத்து 623 ஏக்கர் பயன் பெறும் நிலையில் தற்போது உடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விரைவில் கால்வாயை சீரமைக்க விவசாயிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.