Type Here to Get Search Results !

அரியலூர் மாவட்டம், உதயமான நாள் நவம்பர்23

அரியலூர் மாவட்டம், பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து அரசாணை (நிலை) எண் 683 வருவாய்(வ.நி1(1)) துறை, நாள் 19.11.2007 இன்படி பிரிக்கப்பட்டு, 23.11.2007 முதல் தனி மாவட்டமாகச் செயல்பட்டு வருகிறது. இம்மாவட்டம் வடக்கே கடலூர், தெற்கே தஞ்சாவூர், கிழக்கே கடலூர் மற்றும் தஞ்சாவூர், மேற்கே பெரம்பலூர் மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களை எல்லைகளாகக் கொண்டுள்ளது.


நிர்வாக அலகுகளில்

அரியலூர் மாவட்டம், அரியலூர், உடையார்பாளையம் ஆகிய இரு கோட்டங்களையும், அரியலூர், செந்துறை, உடையார்பாளையம், ஆண்டிமடம் (ஆண்டிமடம் வட்டம் அரசாணை (நிலை)  ஆகிய நான்கு வட்டங்களையும், 195 வருவாய் கிராமங்களையும் உள்ளடக்கியுள்ளது. இம்மாவட்டம், அரியலூர், திருமானூர், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், தா. பழூர், செந்துறை ஆகிய ஆறு வட்டாரங்களையும், 201 ஊராட்சிகளையும் கொண்டுள்ளது. இம்மாவட்டத்தில் அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய இரு நகராட்சிகளும், உடையார்பாளையம், வரதராஜன்பேட்டை ஆகிய இரு பேரூராட்சிகளும் உள்ளன.


அரியலூர் மாவட்டம் தமிழ்நாட்டின் மையப்பகுதியிலும், சென்னையிலிருந்து 265 கி.மீ தெற்கிலும், 1949 ச.கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது.


இம்மாவட்டம் வடக்கில் வெள்ளாறு, தெற்கில் கொள்ளிடம் ஆகிய ஆறுகளை இயற்கை எல்லைகளாகக் கொண்டுள்ளது.


கனிமங்கள் மற்றும் சுரங்கம்

அரியலூர், கனிம வளங்கள் நிறைந்த மாவட்டம். சுண்ணாம்புக்கல், மணல் கற்கள், பாஸ்பேட் முண்டுகள் மற்றும் சில கனிமங்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கிடைக்கின்றன. சுண்ணாம்புப் படிமங்கள், அரியலூர், செந்துறை வட்டங்களில் காணப்படுகின்றன. சாதாரண சிமெண்ட் முதல் தரம் மிகுந்த சிமெண்ட் வரை , சுண்ணாம்பு கற்கள் மூலம் சிமெண்ட் ஆலைகளில் தயாரிக்கப்படுகிறது. தீ களிமண், தரை ஓடுகள், சுடுமண் குழாய்கள், தீ செங்கற்கள் உற்பத்திக்காகவும் மற்றும் இரசாயனத் துறையிலும் பயன்படுத்தப்படுகிறது. உடையார்பாளையம் வட்டத்திலுள்ள ஜெயங்கொண்டம், பழுப்பு நிலக்கரி, எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்கள் செறிந்த பகுதியாகும். மேற்கூறிய முக்கிய கனிமங்கள் தவிர, செம்மண், செங்கல் களிமண் போன்ற சிறுபான்மை அளவு கனிமங்களும் இந்த மாவட்டத்தில் காணப்படுகின்றன.


திருமழபாடியில் வைத்தியநாத சுவாமி கோவில், கல்லங்குறிச்சியில் கலியுக வரதராஜ பெருமாள் கோவில், கங்கைகொண்டசோழபுரத்தில் சிவன் கோவில், குருவாலப்பர் கோவில் போன்றவை சில மிக முக்கிய இந்துக்கோயில்கள் ஆகும். இராஜராஜ சோழன் மகன் இராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட கங்கைகொண்ட சோழபுரம் சிவன் கோவில்(பிரகதீஸ்வரர் கோவில்), சற்றேறக்குறைய தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவிலின் ஒரு சிறு வடிவமாகும். வீரமாமுனிவர் என அழைக்கப்படும் பிரபல கத்தோலிக்க மிஷனரி காண்ஸ்டாண்டினோ ஜோசப் பெஸ்கியால் கட்டப்பட்ட அடைக்கல மாதா ஆலயம், அரியலூரிலிருந்து 32 கி.மீ தொலைவில் ஏலாக்குறிச்சியில் அமைந்துள்ளது. வரலாற்றில் நவம்பர் 23 தமிழ்நாடு அரியலூர் மாவட்டம் உதயமான நாள் குறித்து திருச்சிராப்பள்ளி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் விஜயகுமார் எடுத்துரைத்தார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies