நடிகர் ரஜினிகாந்த் செங்கல்பட்டு மாவட்டத்துக்குச் செல்வதற்காக இ-பாஸ் பெற்றுள்ளார். அவருடைய இ-பாஸ் இணையத்தில் பரவிவருகிறது.

கடந்த 20-ம் தேதி நடிகர் ரஜினிகாந்த் முகக்கவசம் அணிந்தபடி கார் ஓட்டுவது போன்ற ஒரு புகைப்படம், அடுத்த நாள் கேளம்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் தனது மகள் சவுந்தர்யா, மருமகன் விசாகன், பேரனுடன் இருக்கும் ஒரு புகைப்படமும் வெளியானது.

இதையடுத்து ரஜினிகாந்த் முறையாக இ-பாஸ் பெற்று தான் கேளம்பாக்கத்துக்குச் சென்றாரா என்று பலரும் கேள்வி எழுப்பினர். இதுகுறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், கேளம்பாக்கம் செல்ல ரஜினிகாந்த் இ-பாஸ் பெற்றாரா என ஆய்வு செய்து பின்னர் தெரிவிக்கப்படும் என்றார்.

இந்நிலையில் ரஜினிகாந்த் செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டுக்கு இன்று செல்வதற்கு இ-பாஸ் எடுத்துள்ளார். அந்த இ-பாஸில் மருத்துவ காரணங்களுக்காக செல்வதாகவும், கார் ஓட்டுநர் உடன் இன்னோவா காரில் பயணிப்பதாகவும் தகவல் இடம் பெற்றுள்ளது. அவருக்கு இ-பாஸ் வழங்கப்பட்ட தேதியாக ஜூலை 22-ம் தேதியும், பயண தேதியாக ஜூலை 23-ம் தேதியும் (இன்று) குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் இதுவரை அவர் 21-ம் தேதி கேளம்பாக்கம் சென்று வந்ததற்கான இ-பாஸ் விவரங்கள் வெளிவரவில்லை என்பதால் சென்னை மாநகராட்சி விரைவில் அதற்கான விவரங்களை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..
ரஜினிகாந்த் இ-பாஸ் குறித்து அரசு தரப்பில் எதுவும் விளக்கம் அளிக்கப்படவில்லை.
