கோவை: கொரோனா பரவல் தடுப்பு பணியில், அதிகாரிகள் முழுமையாக ஈடுபட்டாலும், தற்போது பொதுமக்களின் அலட்சிய போக்கால், சென்னையை போன்று கோவையும் மாறும் அபாயம் நெருங்கி வருகிறது.
கடந்த, ஜூன் முதல் படிப்படியாக உயர்ந்த பாதிப்பு எண்ணிக்கை தற்போது, கட்டுப்பாட்டை விட்டு கைநழுவி சென்று கொண்டு இருக்கிறது. நேற்றைய நிலவரப்படி, கோவை மாவட்டத்தில் இதுவரை, 3,237 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இறப்பு விகிதமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் தொடர்ந்து பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என, தொடர்ந்து அறிக்கை வெளியிட்டு வருகின்றனர். ஆனால், பொதுமக்களின் ஒத்துழைப்பு பெரிதளவில் இல்லை.தனி ஊரடங்குதான் அபாய மணி!கோவைக்கு தனி பொது ஊரடங்கு தேவையில்லை என்று கூறி வந்த, மாவட்ட நிர்வாகம் நேற்று மாலை முதல் நாளை காலை வரை, தளர்வுகள் இன்றி ஊரடங்கு அறிவித்ததே, நமக்கான முதல் அபாய மணி என்பதை உணர வேண்டும்.
வார இறுதிநாளில் மாநிலம் முழுவதும், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில், சனிக்கிழமை மாலை நேரத்தில் மளிகை கடை, இறைச்சி கடைகளில் அலைமோதிய கூட்டமே இந்த திடீர் ஊரடங்கு அறிவிப்பிற்கு காரணம்.கட்டமும் வட்டமும் போனதெங்கே!ஆனால், நேற்று மாலை ஊரடங்கு அமலாகும் என்ற நிலையில், மதியம், 2:00 முதல் 5:00 மணி வரை, மளிகை மற்றும் இறைச்சி கடைகளில் கூட்டம் அலைமோதியது.
குறிப்பாக, டாஸ்மாக் கடைகளில் இரண்டு நாட்களுக்கும் சேர்த்து, குடிமகன்கள் முண்டியடித்துக்கொண்டு, சரக்கு பாட்டில்களை வாங்கி சென்றதை காணமுடிந்தது.பொதுமக்களின் இச்செயல்பாடுகள், அதிகாரிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த, மார்ச், ஏப்., மாதத்தில் கொரோனா தாக்கம் துவங்கிய நிலையில், அரசு விதிமுறைகளின் படி அனைத்து விதமான கடைகள் முன் வட்டமிட்டும், கட்டமிட்டும் பொதுமக்கள் வரிசையில் நின்று பொருட்களை வாங்கிச்சென்றனர்.தற்போது பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், சுயஒழுக்கம், பொறுப்பு என்பதை எங்கும் காணமுடிவதில்லை. மளிகை, டாஸ்மாக், இறைச்சிக்கடை என சமூக இடைவெளி குறித்த கவனம் சற்றும் இல்லை.
கடை உரிமையாளர்களும், வியாபாரம் நடந்தால் சரி என்ற அலட்சியத்தில், இதை கண்டுகொள்வதில்லை. இதுவே, கோவையில் பெரிய அளவில் பாதிப்பு உருவாக காரணமாக மாறியுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெளிப்படையாக கூற முடியாது!
மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறுகையில்,' மாவட்ட கலெக்டர், எம்.எல்.ஏ.,க்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள் தொடர்ந்து கொரோனா பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். பள்ளி, கல்லுாரி தேர்வுகள் நிறுத்தப்பட்டுள்ளது, போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது, இதன் மூலம் பாதிப்பின் தீவிரத்தை நாம் உணர வேண்டும்.அபாய கட்டத்தில் உள்ளோம் என்று எந்த அரசு அதிகாரியும், அரசியல்வாதிகளும் சொல்ல முடியாது. கோவை மாவட்டம் பெரிய அளவில் ஓர் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது. பொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே, அதிகாரிகளால் அதனை கட்டுப்படுத்த இயலும்' என்றார்.