" வாய்க்கு வந்தபடி சவடால் விடுகிறார் முதல்வர் " - ஸ்டாலின் தாக்கு
கொரோனாவை ஒழிப்பதற்காக தான் கூறிய ஆலோசனைகளை முதல்வர் கேட்கவில்லை என தி.மு.க., தலைவர் #ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில் கூறியுள்ளதாவது:
கொரோனா காரணமாக, தமிழக மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும். கொரோனா தொற்று பரவியது முதல் இன்று வரை நூற்றுக்கணக்கான ஆலோசனைகளை தமிழக அரசுக்கு வழங்கி வருகிறேன். அதிமுக ஆட்சியில் இருந்தாலும், மக்களை காக்கும் பொறுப்பு அனைவருக்கும் உண்டு என்ற பொறுப்பில் ஆலோசனை கூறியுள்ளேன். டாக்டர்கள் என்னிடம் தெரிவித்த ஆலோசனைகளையும், ஊரடங்கில் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் மக்களுக்கு செய்ய வேண்டிய உதவியையும் சொல்லியுள்ளேன்.
இதனை முதல்வர் கேட்கவும் இல்லை. அலட்சியமாக இருந்தார். அவரின் நடவடிக்கையால், கொரோனா தொற்று தினமும் ஆயிரக்கணக்கில் அதிகரித்து வருகிறது. 50 பேர் இறந்து வருகின்றனர். சமூக பரவல் ஆகிவிட்டது என பலர் கூறுகின்றனர். ஆனால், இல்லை என முதல்வர் கூறுகிறார். யாரின் ஆலோசனைகளையும் கேட்கும் மனநிலையில் முதல்வர் இல்லை. இதனால், தமிழகம் மோசமான பேரழிவை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது. இதற்கு ஒரே நபர் காரணம் என்றால், அது முதல்வர் தான்.
மக்களை காப்பாற்ற ஒரு நடவடிக்கையும் எடுக்காத முதல்வர், பணம், கமிஷன் வரும் திட்டங்களை பார்வையிட திருச்சி, கோவை செல்கிறார். தொடர்ந்து, கொரோனாவை கட்டுப்படுத்த ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை ஸ்டாலின் கூறியுள்ளாரா என கூறியுள்ளார். எனது அறிக்கைகளை அனைத்தும் அரசுக்கு ஆலோசனை சொல்லும் அறிக்கைகள் தான். இதை எல்லாத்தையும் மறைத்து 3 மாதம் கழித்து ஸ்டாலின் என்ன சொன்னார் என கேட்டால் என்ன அர்த்தம்.
பணக்காரர் என்றார், கடவுள் என்றார்
இதுவரை, அறிக்கைகளை படித்து ஆலோசனை செயல்படுத்த அவருக்கு மனது இல்லை என நினைத்தேன். ஆனால், தற்போது, அடுத்தவர் ஆலோசனை கூறினால், அதை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை என தெரிகிறது. கொரோனா குறித்து எதுவும் தெரியாமல் இருந்தார். ஏழைகளுக்கு வராது என்றார். வந்தால் காப்பாற்றிலாம் என்றார். பணக்காரர்களுக்கு வரும், யாரும் பயப்பட வேண்டியதில்லை. 3 நாளில் ஒழியும் என்றார். ஆனால், கொரோனாவை ஒழிக்க முடியாததால், கடவுளுக்கு தான் தெரியும் என்கிறார். வாய்க்கு வந்தபடி சவடால் விடுவதுதான் அவரது வழக்கம். எதுவும் நடக்காததால், ஸ்டாலின் தான் காரணம் என்கிறார். இவ்வாறு அந்த வீடியோவில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.