Type Here to Get Search Results !

அருள்மிகு அழகிய மணவாளர் – கமலவல்லி நாச்சியார் திருக்கோயில்

 ஆலயம் அறிவோம்

அருள்மிகு அழகிய மணவாளர் – கமலவல்லி நாச்சியார் திருக்கோயில் 

உறையூர்,திருச்சிராப்பள்ளி

மணவாளர் கோயில்

மனிதர்கள் மட்டுமல்ல செல்வமகளான லட்சுமி தேவி மனித குல பெண்ணாக பிறந்து, தனது கணவனாக அந்த ரங்கநாதரையே மணந்த “உறையூர் அழகிய மணவாளர் திருக்கோயில்” சிறப்புக்கள் பற்றி இங்கு அறிந்து கொள்ளலாம்

வரலாறு

சுமார் 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இக்கோயில் சோழர்கள் காலத்தில் நன்கு சீரமைத்து கட்டப்பட்டது. ஒரு காலத்தில் சோழ ராஜ்ஜியத்தின் தலைநகராக  உறையூர் இருந்திருக்கிறது. 12 ஆழ்வார்களில் ஒருவரான திருப்பாணாழ்வார் பிறந்த ஊர் இது. இங்குள்ள பெருமாள் “அழகிய மணவாளர்” என்றும், தாயார் “கமலவல்லி” என்கிற பெயரில் அழைக்கப்படுகின்றனர். திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பெருமாள் கோயில். 

108 வைணவ திவ்ய தேச கோயில்களில் 2 ஆவது திவ்ய தேசமாக இருக்கிறது இந்த அழகிய மணவாளர் கோயில்.

இக்கோயில் புராணங்களின் படி நங்க சோழ மன்னனால் காட்டில் குழந்தையாக கண்டெடுக்கப்பட்ட லட்சுமி தேவி கமலவல்லி என்ற பெயர்சூட்டப்பட்டு மன்னனின் மகளாக வளர்க்கப்பட்டாள். திருமண பருவத்தை அடைந்ததும் ரங்கநாதராகிய பெருமாளையே மணக்க விரும்பினார். அவரின் விருப்பத்திற்கிணங்க அந்த ரங்கநாதரே தாயாரை மணந்து கொண்டதால் இங்கிருக்கும் மூலவர் மற்றும் தாயார் விக்கிரகங்கள் வடக்கு திசை பார்த்தவாறு இருக்கின்றன. கமலவல்லியாக லட்சுமி தேவியே இக்கோயில் இருக்கும் தலத்தில் பிறந்த காரணத்தால் இது நாச்சியார் கோயில் எனவும் அழைக்கப்படுகிறது. கோயில் மூலஸ்தானத்தில் நாச்சியாருக்கு மட்டுமே உற்சவர் சிலை இருக்கிறது. பெருமாளுக்கு உற்சவர் சிலை இல்லை.

சிறப்புக்கள்;

பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசி தினத்தில் பெருமாள் சொர்க்க வாசலை கடப்பார். ஆனால் அழகிய மணவாளர் கோயிலில் கமலவல்லி தாயார் மட்டுமே சொர்க்க வாசல் கடக்கும் நடைமுறை இருக்கிறது. பங்குனி மாத ஆயில்ய நட்சத்திரத்தில் கமலவல்லி தாயார் அவதரித்ததால் பங்குனி மாதத்தில் இக்கோயிலில் ஸ்ரீரங்கம் கோயிலில் நடைபெறும் விழாக்கள் முறையை பின்பற்றி நடத்தப்படுகின்றன.

பொதுவாக அனைத்து பெருமாள் கோயில்களிலும் குங்குமம் பிரசாதம் தரப்படும். ஆனால் இந்த அழகிய மணவாளர் கோயிலில் சந்தனம் பிரசாதமாக தரப்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் கோயில் நைவேதியங்களில் காரத்திற்கு மிளகாய் தூளுக்கு பதிலாக மிளகு சேர்க்கப்படுகிறது. ஆயில்ய நட்சத்திர தினத்தில் கமலவல்லி தாயாருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் கூடிய விரைவில் திருமணம் நிச்சயமாகும் என்பது அனுபவம் பெற்ற பக்தர்களின் வாக்கு ஆகும். பிரிந்து வாழும் தம்பதிகள், அடிக்கடி சண்டை போடும் கணவன் மனைவி இங்கு வந்து வேண்ட மனபூசல்கள் நீங்கி ஒற்றுமை ஏற்படும். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் தாயாருக்கு திருமஞ்சனம் செய்வித்து தங்களின் நேர்த்திக்கடனை நிறைவேற்றுகின்றனர்.

அமைவிடம்

அருள்மிகு அழகிய மணவாளர் – கமலவல்லி நாச்சியார் திருக்கோயில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உறையூர் என்கிற ஊரில் அமைந்துள்ளது. உறையூருக்கு திருச்சி மாநகரத்திலிருந்து பேருந்து வசதிகள் அதிகம் உள்ளன.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies