பொள்ளாச்சி, நவ.19
பொள்ளாச்சி அருகே விவசாயத்துக்காக பயன்படுத்தப்படுகின்ற மானிய விலையில் கிடைக்கும் யூரியாவை வைத்து பிளைவுட் ஒட்டும் பசை தயாரித்த நிறுவனத்தை சீல் வைத்ததோடு 927 மூட்டை யூரியாவையும் பறிமுதல் செய்துள்ளனர் வருவாய்த்துறை அதிகாரிகள்.
![]() |
பொள்ளாச்சி சார்-ஆட்சியர் வைத்திநாதன், ஆனைமலை வட்டாட்சியர் வெங்கடாச்சலம் மற்றும் வருவாய்த்துறையினர் ஆய்வு |
பொள்ளாச்சி அடுத்த கணபதிபாளையத்தில் ஒரு தனியார் நிறுவனம் மானிய விலை யூரியாவை பதுக்கி வைத்திருப்பதாக வருவாய்த்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, பொள்ளாச்சி சார்-ஆட்சியர் வைத்திநாதன், ஆனைமலை வட்டாட்சியர் வெங்கடாச்சலம் மற்றும் வருவாய்த்துறையினர் நேற்று
( புதன்கிழமை ) கணபதிபாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் திடீர் ஆய்வு செய்தனர்.
ஆய்வு செய்ததில், அந்த நிறுவனம் பிளைவுடன் ஒட்டும் பசை தயாரிக்கும் நிறுவனம் என்பது தெரியவந்தது. தொடர்ந்து சோதனை செய்ததில் அந்த நிறுவனம் விவசாயத்திற்கு பயன்படுத்தும் மானிய விலை யூரியாவை வைத்து, அதனுடன் சில கெமிக்கல்களை சேர்த்து பிளைவுட் ஒட்டும் பசை தயாரிப்பது தெரியவந்தது.
![]() |
பொள்ளாச்சி சார்-ஆட்சியர் வைத்திநாதன், ஆனைமலை வட்டாட்சியர் வெங்கடாச்சலம் மற்றும் வருவாய்த்துறையினர் ஆய்வு |
இதையடுத்து, அந்த நிறுவனத்தில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த "927" மூட்டை மானிய விலையில் கிடைக்கும் யூரியாவை பறிமுதல் செய்ததுடன், நிறுவனத்தையும் பூட்டி சீல் வைத்தனர். நிறுவனத்தின் உரிமையாளர் முஸ்தபா என்பவர் மீதும் ஆனைமலை போலீஸார் வழக்குபதிவு செய்ய சார்-ஆட்சியர் பரிந்துரை செய்துள்ளார்.
கடந்த இரண்டு மாதங்களில் மானிய விலை உரங்களை பதுக்கி வைத்திருந்து இரண்டு குடோன்களுக்கு வருவாய்த்துறையினர் சீல் வைத்தது குறிப்பிடத்தக்கது.
பொள்ளாச்சி சுற்றுப்பகுதிகளில் மானிய விலை உரங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதும், மானிய விலை உரங்களை வேறு பொருட்களாக மதிப்பு கூட்டி விற்பனை செய்வதும் தொடர்ந்து நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.