Type Here to Get Search Results !

திப்பு சுல்தான் பிறந்த தினம் நவம்பர் 20

Top Post Ad

மைசூர் பேரரசை ஆட்சி செய்த மன்னர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவராக கருதப்படுபவர், திப்பு சுல்தான். 
தொடக்ககாலத்தில் ஆங்கிலேயருக்கு சிம்மசொப்பனமாக விளங்கி, கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரத்தை உடைத்தெறியும் அளவுக்குப் பெரும் சவாலாக இருந்து, தன்னுடைய கடைசி மூச்சு நிற்கும் வரை ஆங்கிலேயர்களை எதிர்த்து உறுதியுடன் போராடிய மாவீரன். 

இளம் வயதிலேயே திறமைப்பெற்ற போர்வீரனாக வளர்ந்த அவர், சிறந்த ஆட்சியாளராகவும், நிர்வாகியாகவும் மற்றும் சமூக சீர்திருத்தவாதியாகவும் விளங்கினார். ‘உயிர் பிரியும் நேரம் கூட தங்களுக்கு அடங்கி நடக்க வேண்டும்’ என்று ஆங்கிலேயர் கூறியபோது, ‘முடியாது’ என மறுத்து, கர்ஜனையோடு “ஆடுகளைப்போல 200 ஆண்டுகள் பிழைப்பதை விட, புலியைப் போல இரண்டு நாட்கள் வாழ்ந்து மடியலாம்” என முழங்கியபடியே மரணத்தைத் தழுவியவர். 

‘மைசூரின் புலி’ என அழைக்கப்படும் திப்பு சுல்தான் 1750 ஆம் ஆண்டு நவம்பர் 20 ஆம் தேதி இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள “தேவனஹள்ளி” என்ற இடத்தில் ஹைதர் அலிக்கும், பாக்ர்-உன்-நிசாவுக்கும் மகனாகப் பிறந்தார். 

இவருடைய தந்தை சாதாரண குதிரைவீரனாக இருந்து, பிறகு ஒரு அரசை ஆளும் மன்னனாக உயர்ந்து, இரண்டாம் மைசூர் போரில் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டு வெற்றிக்கண்டவர்.

 திப்பு சுல்தான், இளம் வயதிலேயே தன்னுடைய தந்தையுடன் பல போர்க்களம் கண்டார், இதனால் தன்னுடைய பதினாறு வயதிலேயே யுத்தத்தந்திரங்கள், ராஜதந்திரங்கள் என அனைத்திலும் தேர்ச்சிப்பெற்று, சிறந்த படைத்தளபதியாக வளர்ந்தார். 

1776 ஆம் ஆண்டு மராட்டியர்களுக்கு சொந்தமான காதிகோட்டையை கைப்பற்றிய திப்புசுல்தான், பிறகு 1780ல் நடைபெற்ற இரண்டாம் மைசூர் போரில் ஆங்கிலப்படைகளுக்கு எதிராக தந்தையுடன் இணைந்து போர்தொடுத்தார். பின்னர்,  1782ல் தன்னுடைய தந்தை ஹைதரலியின் மரணத்திற்குப் பிறகு, 1782 ஆம் ஆண்டு டிசம்பர் 26 நாள் தன்னுடைய 32 வது வயதில் ‘சுல்தானாக’ அரியானை ஏறினார். 

மைசூரின் மன்னனாக பொறுப்பேற்ற திப்பு சுல்தான் அவர்கள், ‘புலி சின்னம் பொறிக்கப்பட்ட கொடியை’ தன்னுடைய சின்னமாக பயன்படுத்தினார். சுமார் நான்கு ஆண்டுகள் நடைபெற்ற இந்தப் போர் 1784 ஆம் ஆண்டு மங்களூர் உடன்படிக்கையின் மூலம் முடிவுக்கு வந்தது.

1789 ஆம் ஆண்டு திப்பு சுல்தான் தலைமையில் ஆங்கிலேயருக்கு எதிராக நடைபெற்ற மூன்றாம் மைசூர் போரில் மராட்டிய பேரரசும், ஐதராபாத் நிஜாமும் பிரிட்டிஷ் படைத்தளபதி கார்ன் வாலிசுடன் இணைந்து திப்பு சுல்தானுக்கு எதிராகப் போர்தொடுத்தனர். 

ஆனால், சற்றும் கலங்காத திப்புசுல்தான் எதிரிகளை துணிச்சலுடன் எதிர்கொண்டார். 1792 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற இந்தப் போரில் திப்பு சுல்தான் தோல்வியடைந்தார். இறுதியில் சீரங்கப்பட்டினம் அமைதி ஒப்பந்தத்தின்படி பல பகுதிகள் பிரிட்டிஷ், ஐதராபாத் நிஜாம் மற்றும் மராட்டியர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

‘போரில் திப்புசுல்தானை வீழ்த்தமுடியாது’ என அறிந்த பிரிட்டிஷ்காரர்கள், சூழ்ச்சி செய்து, திப்புவின் அமைச்சர்களையும், அதிகாரிகளையும் விலைப்பேசி, லஞ்சத்தை ஆயுதமாகப் பயன்படுத்தி, திப்புவை அழிக்கத் திட்டம் தீட்டினர். 

இந்த சூழ்ச்சிக்கு இடையில் 1799 ஆம் ஆண்டு நடைபெற்ற நான்காம் மைசூர் போரில், திப்பு சுல்தான் தீரமுடனும், துணிச்சலுடனும் போர்புரிந்தாலும், எதிரிகளின் நயவஞ்சக செயலினால் பிரிட்டிஷ் படைத் தொடர்ந்து முன்னேறித் தாக்கியது. 

இந்தத் தாக்குதலில் குண்டடிப்பட்டு கிடந்த திப்புசுல்தானிடம், ‘தங்களுக்கு அடங்கி நடக்க வேண்டும்’ என்று ஆங்கிலேயர் கூறியபோது, ‘முடியாது’ என மறுத்து கூறிய அவர், “ஆடுகளைப்போல 200 ஆண்டுகள் பிழைப்பதை விட, புலியைப் போல இரண்டு நாட்கள் வாழ்ந்து மடியலாம்” என முழங்கியபடியே 1799 ஆம் ஆண்டு மே 4  ஆம் தேதி வீரமரணம் அடைந்தார்1750-ஆம் ஆண்டு பிறந்து இந்தியாவின் மைசூர் பகுதியின் மன்னராக ஆட்சி புரிந்த திப்பு சுல்தானை சிறப்பிக்க இந்திய அஞ்சல்துறை 1974-ஆம் ஆண்டு 50-பைசா மதிப்புள்ள அஞ்சல்தலை வெளியிட்டது என்பதை வரலாற்றில் நவம்பர் 20 திப்புசுல்தான் பிறந்த தினம் குறித்து திருச்சிராப்பள்ளி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் விஜயகுமார் எடுத்துரைத்தார்.

Below Post Ad

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.