Type Here to Get Search Results !

அதிமுகவின் அடி மடியில் கைவைத்த பாஜக: எடப்பாடியின் மாஸ்டர் பிளான் !

அதிமுகவிலிருந்து நிர்வாகிகளை பாஜகவுக்கு இழுக்கும் முயற்சிகள் நடைபெற்றுவருவதாக கூறப்படுகிறது.


தமிழ்நாட்டில் சட்ட மன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் பெரும்பாலான கட்சிகள் தங்கள் கூட்டணிக்கு எந்தக் கட்சியை கொண்டு வரலாம் என கணக்கு போட்டுவரும் நிலையில் பாஜகவிலோ எந்தக் கட்சியிலிருந்து நிர்வாகிகளை தங்கள் பக்கம் இழுக்கலாம் என காய் நகர்த்தி வருவதாக கூறுகின்றனர் அக்கட்சியைச் சேர்ந்தவர்கள்.


தமிழ்நாட்டில் பாஜகவின் தலைவர் பதவி நிரப்பப்படாமல் இருந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் எல்.முருகனுக்கு அந்தப் பதவி வழங்கப்பட்டது. தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் தமக்கு வழங்கப்பட்ட பொறுப்பை திறம்பட செய்ய ஆர்வம் காட்டுகிறார். மாற்று கட்சியினரை பாஜக பக்கம் இழுத்துவர அவருக்கு அசைன்மெண்ட் வழங்கப்பட, அதே பணியை தம் கட்சி நிர்வாகிகளுக்கும் அவர் கொடுத்துள்ளார்.


வி.பி.துரைசாமி, கு.க. செல்வம் என திமுகவின் தலைமைக் கழக நிர்வாகிகள் இருவரை பாஜக வளைத்துள்ள நிலையில் வேறு எந்தக் கட்சியில் யாரைத் தூக்கலாம் என பருந்துப் பார்வையில் வட்டமிட்டு வருகிறது.


இது தொடர்பாக கட்சி நிர்வாகிகளிடம் பேசியுள்ள எல்.முருகன் மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பெரிய பொறுப்புகளில் இருக்க வேண்டும் என்பதில்லை. மாவட்ட அளவில், ஒன்றிய அளவில் அந்தந்தப் பகுதிகளில் செல்வாக்குள்ள நபர்களாக இருந்தால்போதும் என தெரிவித்துள்ளதாக அக்கட்சி வட்டாரங்களில் கூறப்படுகிறது.


இந்நிலையில் பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக பக்கம் கவனத்தை திருப்பியுள்ளதாக கூறப்பட்டது. கூட்டணி கட்சியையும் விட்டுவைக்கவில்லையா என்று பேச்சு எழுந்த நிலையில் தற்போது அந்தக் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் அதிமுக பக்கம் திரும்பிவிட்டனர்.


அதிமுகவின் முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணனுக்கு பாஜக சார்பில் ஸ்கெட்ச் போடப்பட்டது. இவர் ஜெயலலிதா முதன்முறையாக ஆட்சி அமைத்த 1991 -96 காலகட்டத்தில் விவசாயத் துறை அமைச்சராக பதவிவகித்தார். 2011ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஆலங்குடியில் போட்டியிட்டு சட்ட மன்ற உறுப்பினரானார். இவருக்கு பாஜக குறிவைத்துள்ளது குறித்து எடப்பாடி பழனிசாமிக்கு தகவல் வர அவர் கு.ப.கிருஷ்ணனிடம் பேசி பாஜக ஆபரேஷனை தடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.


ஏற்கெனவே பாஜகவுக்கும், அதிமுகவுக்கும் லேசான மோதல் தொடங்கியுள்ள நிலையில் இந்த ஆள் பிடிக்கும் விவகாரம் அதிமுக தரப்பை மேலும் அதிருப்தியடைய வைத்துள்ளது.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies