Type Here to Get Search Results !

தமிழ்நாட்டில் இ பாஸ் ரத்து? கலெக்டர்களை அழைத்த முதல்வர்!

இ பாஸ் முறையை ரத்து செய்ய மத்திய அரசு வலியுறுத்தியுள்ள நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.


தமிழ்நாட்டில் இ பாஸ் ரத்து, பொது போக்குவரத்துக்கு அனுமதி என்ற இரு முக்கிய அறிவிப்புகள் எப்போது வெளியாகும் என்பதே மக்களின் ஒரே எதிர்பார்ப்பாக உள்ளது.

கொரோனா பரவல் காரணமாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு சரியாக ஐந்து மாதங்கள் நிறைவடைந்துவிட்டன. கொரோனா ஏற்படுத்திய பாதிப்பைக் காட்டிலும் இந்த பொதுமுடக்கம் தங்கள் வாழ்வாதரங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். நிலைமை சகஜமானாலும் இதனால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து எப்போது மீள்வோம் எனத் தெரியவில்லை என்கின்றனர்.

பொது முடக்கத்தில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. படிப்படியாக அனைத்து நிறுவனங்களும் திறக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் பொது போக்குவரத்துக்கு அனுமதியளிக்கப்படாத நிலையில் தங்கள் தொழில் ஸ்தம்பித்துவிட்டதாக வியாபாரிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.

தமிழ்நாட்டில் இ பாஸ் ரத்து: அமைச்சர் சொல்வது இதுதான்!

இ பாஸ் முறையை நீக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், மனித உரிமைகள் ஆணையம் வரை இந்த விவகாரம் சென்றபின் இதில் தளர்வுகளை அறிவித்தது தமிழ்நாடு அரசு. விண்ணப்பிக்கும் அனைவருக்கும் தற்போது இ பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. அனைவருக்கும் வழங்கப்படும் போது ஏன் இந்த முறை அமலில் இருக்க வேண்டும், இதற்கு விண்ணப்பிக்கத் தெரியாத பாமரர்கள் ஏராளமாக உள்ளனர், இ பாஸ் சோதனை செய்யும் இடங்களில் தேவையற்ற கூட்டமும், வாகன நெரிசலும் ஏற்படுகின்றன என குற்றச்சாட்டுகள்தான் அதிகளவில் வருகின்றன.

இந்நிலையில் சனிக்கிழமை மத்திய அரசு மாநிலங்களைவிட்டு மாநிலங்கள் செல்லவோ, மாவட்டங்கள்விட்டு மாவட்டங்கள் செல்லவோ தடை விதிக்கக்கூடாது என மாநில அரசுகளை அறிவுறுத்தியது. இதை ஏற்று புதுச்சேரி அரசு ஞாயிற்றுக் கிழமை இ பாஸ் முறையை ரத்து செய்தது. ஆனால் தமிழ்நாடு அரசு இது குறித்து முடிவை அறிவிக்காமல் உள்ளது. புதுச்சேரி மக்களுக்கு மகிழ்ச்சியளிக்ககூடிய செய்தியை அம்மாநில அரசு அறிவித்தாலும், தமிழ்நாட்டுக்குள் வர இ பாஸ் பெற்றாக வேண்டும் என்ற நிலை உள்ளது.

தமிழ்நாட்டில் இ பாஸ் முறையை ரத்து செய்வது குறித்து முதல்வர் ஆய்வு செய்துவருவதாக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியிருந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தற்போது மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். நேற்று முன்தினம் தலைமைச் செயலாளர் சண்முகம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அந்தக் கூட்டத்தில் கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இ பாஸ் நடைமுறை தற்போதைக்கு தொடரும் என தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

தற்போது அமலில் உள்ள பொது முடக்கம் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறை பொது முடக்கம் நிறைவடையும் போதும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்துவார். அந்த வகையில் 29ஆம் தேதி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளார்.

இந்தக் கூட்டத்தில் இ பாஸ் ரத்து, பொது முடக்கத்துக்கு அனுமதிக்கலாமா, அடுத்தகட்ட பொது முடக்கம் உள்ளிட்டவற்றை குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கூட்டத்துக்குப் பின்னரோ அல்லது அதற்கு முன்பாகவோ இ பாஸ் தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகும் என கோட்டை வட்டாரங்களில் கூறப்படுகிறது.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies