சண்டைக் கலைஞராக அறிமுகமாகி நடிகராக மாறியவர் பொன்னம்பலம் 90-களில் வில்லன் நடிகராக பல படங்களில் நடித்து புகழ்பெற்ற பொன்னம்பலம், அப்போது கபாலி என்ற பெயரில் தமிழக மக்கள் மனதில் இடம்பிடித்தார்.
பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் மீண்டும் மக்களிடையே நன்கு பரிச்சயமானார். அதிமுகவின் நட்சத்திர பேச்சாளராக தமிழகம் முழுக்க தேர்தல் பிரசாரம் செய்த இவர், 2017-ஆம் ஆண்டு அக்கட்சியிலிருந்து விலகி முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார்.
இந்நிலையில் சிறுநீரக கோளாறு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பொன்னம்பலம் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதையறிந்த நடிகர் கமல்ஹாசன் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளை போனில் கேட்டறிந்தார். மேலும் பொன்னம்பலம் குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்றுக் கொள்வதாகவும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசனைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த், நடிகர் பொன்னம்பலத்தை தொடர்புகொண்டு தொலைபேசியில் ஆறுதல் தெரிவித்துள்ளார். பின்னர் மருத்துவச் செலவை முழுமையாக நான் கவனித்துக் கொள்கிறேன் நீங்கள் நன்றாக இருங்கள் கவலைப்பட வேண்டாம் என்று கூறிய ரஜினிகாந்த், ஊரடங்கு முடிந்தபிறகு நேரில் வந்து பார்க்கிறேன் என்றும் பொன்னம்பலத்திடம் தெரிவித்துள்ளார்.

