சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்ற மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சிறையில் இருந்து வெளி வருவதற்கான நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார்.
அவர் சிறை செல்வதற்கு முன்னர் ஓ.பி.எஸ்., கட்சி தலைமைக்கு எதிராக போர்கொடி தூக்கிய காரணத்தால், ஈ.பி.எஸ்.யை முதல்வர் நாற்காலியில் அமர வைத்து விட்டு சென்றார்.
ஆனால், ஈ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். ஆகிய இருவரும் இணைந்து சசிகலா குடும்பத்தையே ஓரங்கட்டி விட்டனர். எனினும் சசிகலாவின் அபிமானிகள் அதிமுகவில் ஏராளம். எனவே, அவர் வெளியே வந்த பின்னர் பல்வேறு திருப்பங்கள் தமிழக அரசியல் களத்தில் நிகழலாம் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
சர்ச்சை பேச்சால் வந்த வினை
இதனிடையே, நாட்டை உலுக்கிய சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் அரங்கேறியுள்ளது. காவல் நிலையத்தில் கடுமையாக தாக்கப்பட்டதால் தான் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்ததாக குற்றம் சாட்டப்படுகிறது. ஆனால், இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தந்தை, மகன் ஆகிய இருவரும் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தனர் என்று பிரேதப்பரிசோதனை அறிக்கை வரும் முன்னரே தெரிவித்தார். இது கடுமையான சர்ச்சைகளை ஏற்படுத்தியது. போலீசாரை காப்பாற்றும் நோக்கத்தில் முதல்வர் இவ்வாறு தெரிவித்துள்ளதாக விமர்சிக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, சாத்தான்குளம் சம்பவம் தொடர்பான விசாரணை நடக்கும் முன்பே இருவரும் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்கள் எனப் பொய்யான தகவலை முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். குற்றவாளிகளைப் பாதுகாக்கும் செயலாகவே இதனை கருத வேண்டும். இந்த கொலைக்கு முதல்வருக்குத் தொடர்பு உள்ளதா என விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி வழக்கறிஞர் ராஜராஜன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
மேலும், இந்த வழக்கை விசாரிக்கும் சிபிசிஐடி முதல்வர் கவனிக்கும் துறையின் கீழ் வருகிறது என்பதால், வழக்கு விசாரணை திசை மாறாமல் இருக்க நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பின் கீழ் விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவர் தனது மனுவில் கோரியுள்ளார்.
முதல்வர் பதவிக்கு வந்த சிக்கல்
இந்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்து விட்டால் பிரச்சினை இல்லை. ஆனால், இதனை விசாரிக்கும் பட்சத்தில்தான் எடப்பாடி பழனிசாமிக்கு பிரச்சினை. இந்த மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக் கொண்டாலே முதல்வர் பதவியை எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாவார். இது கொலை வழக்கு என்பதால் அனைத்து பக்கத்திலும் அவருக்கு நெருக்கடி அதிகமாகும் வாய்ப்புள்ளது. எனவே, அவருக்கு அடுத்தபடியாக இருக்கும் துணை முதல்வர் ஓ.பி.எஸ்., முதல்வராகும் நிலை ஏற்படும்.
ஓ.பி.எஸ். வைத்த செக்
இந்த சூழலில் முதல்வர் எடப்பாடிக்கு கிடைத்திருப்பதாக சொல்லப்படும் மற்றொரு அதிர்ச்சிகரமான தகவல், இந்த வழக்கை தொடுத்திருப்பதன் பிண்ணனியில் இருப்பது ஓ.பி.எஸ்., தரப்பு தானாம். ஏற்கனவே கட்சியில் போதிய அங்கீகாரம் இல்லாமல் சைலண்டாக வலம் வரும் ஓ.பி.எஸ்., தனது டெல்லி தொடர்புகள் மூலம் இதனை மூவ் செய்து வருவதாக எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்திருக்கும் தகவலால் தற்போது அவர் அதிர்ச்சியில் உறைந்துள்ளாராம்.
எனவே, இந்த வழக்கை விசாரணைக்கு வரவிடாமல் தள்ளுபடி செய்யும் பொருட்டு சட்ட வல்லுநர்களுடனும் அவர் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆளுநருடன் சந்திப்பு... நீதிபதி மாற்றம்
இந்த நிலையில் தான் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து சுமார் 30 நிமிடங்கள் பேசியுள்ளார் முதல்வர் பழனிசாமி, அப்போது சாத்தான்குளம் விவகாரம் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
அதேபோல் உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி பி.என்.பிரகாஷ், சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு பதிலாக நீதிபதி சத்யநாராயணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வழக்கமாக நடைபெறும் நடைமுறை என்றாலும் இந்த மாற்றம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
எம்.எல்.ஏ.க்கள் பதவி நீக்கம் வழக்கையும், ஆளும் கட்சி பேனர் விழுந்து சுபஸ்ரீ இறந்த வழக்கையும் நீர்த்துப் போக செய்தவர் என்று நீதிபதி சத்யநாராயணன் மீது ஏற்கனவே விமர்சனங்கள் இருந்த நிலையில், சிசிடிவி ஆதாரங்கள் உள்ள உடுமலை சங்கர் ஆணவ கொலையாளிகளுக்கு விடுதலை வழங்கிய வழக்கிய விவகாரத்திலும் இவரது பெயர் சர்ச்சைக்குள்ளானது.
யார் அந்த முக்கிய பிரமுகர்
முன்னதாக இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதரை காப்பாற்றும் முயற்சியில் ஆளுங்கட்சி முக்கிய பிரமுகர் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. ஸ்ரீதர் தப்பி சென்ற போது அவரை மடக்கி பிடித்த சிபிஐடி போலீசார், அவர் சென்ற மாருதி ஸிப்ட் காரையும் பறிமுதல் செய்துள்ளனர்.
![]() |
| தி இந்து ஆங்கில நாளிதழ் செய்தி |
அப்போது, தான் அதிமுக அமைச்சருக்கு நெருக்கமானவர் என மிரட்டும் தொணியில் ஸ்ரீதர் பேசியதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளதாக தி இந்து ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் தப்பிச்செல்வதற்காக ஆளுங்கட்சியினர் சிலர் உதவியதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.



