எங்கள் புகழ் வாழும் வரை கே.பி புகழும் வாழும் என்று கமல் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் திரையுலகின் ஆளுமைகளில் ஒருவரான இயக்குநர் கே.பாலசந்தருக்கு இன்று (ஜூலை 9) 90-வது பிறந்த நாளாகும். ரஜினி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல நடிகர்களை அறிமுகப்படுத்தியவர். 'நீர்க்குமிழி', 'சர்வர் சுந்தரம்', 'இரு கோடுகள்', 'அவள் ஒரு தொடர்கதை', 'அபூர்வ ராகங்கள்', 'தண்ணீர் தண்ணீர்' உள்ளிட்ட பல்வேறு சிறந்த படங்களை இயக்கி புகழ் பெற்றவர். 9 தேசிய விருதுகள் வென்றுள்ள கே.பாலசந்தருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ மற்றும் தாதாசாகிப் பால்கே விருது ஆகியவற்றை வழங்கி கவுரவித்தது.
உடல்நலக் குறைவால் 2014, ஆண்டு டிசம்பர் 23-ம் தேதி காலமானார். இன்று கே.பாலசந்தரின் 90-வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரால் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள், பிரபலமானவர்கள் ஆகியோர் கே.பி பற்றிய நினைவலைகளைப் பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோ பதிவுகள் கே.பாலசந்தரின் தயாரிப்பு நிறுவனமான கவிதாலயா யூடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டு வருகிறது.
இதில் கே.பாலசந்தர் குறித்து கமல் கூறியிருப்பதாவது:
கே.பி ஐயா அவர்களிடம் முதன்முதலில் வாஹினி படப்பிடிப்பு தளத்தில் ஜெமினி மாமா என்னை அறிமுகப்படுத்தி வைத்தார். 'வெள்ளி விழா' படப்பிடிப்பு என்று நினைக்கிறேன். ரொம்ப பம்பரமாக இயங்கிக் கொண்டிருந்தவர், சற்று நின்று என்னை கவனித்தார். அந்தக் கவனிப்பு பிற்பாடு இவ்வளவு பெரிய உறவாக நிலைக்கு என்று கனவு கூட காணவில்லை.
அதற்குப் பிறகு 16 வயது சிறுவனாக அவரிடம் வந்து சேர்ந்தேன். அவர் வாழ்வில் அவர் எனக்குக் கொடுத்த இடமும், என் வாழ்வில் அவருக்கு கொடுத்த இடமும் நாங்கள் எதிர்பாராமல் நிகழ்ந்த ஒன்று. இயற்கையாய் நிகழ்ந்த ஒன்று. அது அப்பா - மகன் உறவாக மாறிவிட்டது. அவர் வீட்டில் என்னை ஒரு பிள்ளையாக நினைக்கத் தொடங்கி பல வருடங்களாகி விட்டன.
என்னிடம் நிறைய பேசியிருக்கிறார். அறிவுரை சொல்வார். வசனங்களைச் சொல்லிக் கொடுப்பதற்காகவும், கதைகளைப் பற்றியும் பேசுவார். என்னை நல்வழிப்படுத்துவதற்காகத் திட்டியும் இருக்கிறார். ஆனால், நாங்கள் இருவரும் பேசிய உரையாடல்களில், என் பகுதியை மட்டும் தனியாகப் பிரித்து எடுத்து பதிவு செய்தால் அது 3 பக்க பேப்பர்களில் அடங்கிவிடும். என் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய கெட்டிக்காரத்தனம் என்னவென்றால் அவருடன் கலந்து உரையாடாமல், செல்வதை எல்லாம் தெளிவாக கேட்டுக் கொண்டேன். அதனால் தான் என் வாழ்க்கை இன்னும் சிறப்பாக அமையப் பெற்றது என்று சொல்லலாம்.
இப்போது கூட அவர் இருந்திருந்து 90-வது பிறந்த நாளைக் கொண்டாட வேண்டும் என்றால், நாங்கள் முதலில் போய் அனுமதி கேட்டிருப்போம். அதை எப்படியெல்லாம் செய்யணும், எது செய்யக்கூடாது என்பதை விளக்கி பட்டியல் போட்டு கையில் கொடுத்துவிடுவார்.
என் கதையில் அவர் நடிக்க வேண்டுமென்று நெடுநாள் ஆசை. அதை 'உத்தம வில்லன்' என்ற படத்தின் மூலம் நிறைவேற்றிக் கொடுத்துவிட்டுத் தான் சென்றார். என்னுடைய வசனங்களைப் பார்க்கும் போது, விமர்சன கண்ணோட்டத்தில் தான் பார்ப்பார். ஒரு ரசிகனாகப் பார்த்து "எப்படிடா உனக்கு இப்படி தோணுச்சு" என்பார். கடைசி காலத்தில் மேடைகளில் பேசும் போது என்னை ஒருமையில் பேசுவதா, அவர் என்று பேசுவதா என கே.பி ஐயாவுக்கு குழப்பமே வந்துவிட்டது. அவருக்கு என்றுமே நான் 16-வது பையன் தான்.
இன்று அந்த மாதிரி ஒரு வழிகாட்டி எத்தனை நடிகர்களுக்குக் கிடைப்பார்கள் என்று யோசித்து பார்த்தால், எனக்கு கிடைத்த அதிர்ஷ்டத்தின் மகிமை இன்று எனக்கு புரிகிறது. கே.பாலசந்தர் என்பவர் எங்களைப் போன்றவர்கள் இருக்கும் வரை, எங்கள் புகழ் வாழும் வரை அவருடைய புகழும் வாழும். ஏனென்றால் நாங்கள் எல்லாம் அவர் பிடித்து வைத்த பொம்மைகள். பிற்பாடு பேச ஆரம்பித்துவிட்டோம் அவ்வளவே.
ஒரு பெரிய நட்சத்திர பட்டாளத்தையே உருவாக்கிவிட்டுச் சென்றிருக்கிறார். நட்சத்திரங்களாக மட்டுமல்ல இயக்குநர்களாக, இசையமைப்பாளர்களாக என்று ஒவ்வொரு துறையிலும் ஆட்களை விட்டுச் சென்றிருக்கிறார். ஒரு விழாவுக்கு அவரைப் பற்றி எழுதி, அது பத்திரிகையில் அச்சிடுவதாக இருந்தது. தன் பேனாவால் அதை அடித்து, இதெல்லாம் எழுதக் கூடாது என்றார். "சினிமாத்துறைக்கு நீர் கொடுத்த கொடை போல், நான் யார் கொடுத்தும் பார்த்ததில்லை என் வாழ்நாளில்" என்று எழுதியிருந்தேன். அதை அன்று அவர் பிராசுரிக்க அனுமதிக்கவில்லை.
இன்று அவர் இல்லை என்ற தைரியத்தில் அதைச் சொல்லி பதிவு செய்கிறேன். எனக்கு கிடைத்த குருமார்களே அற்புதமானவர்கள், அதில் அற்புதமானவர் கே.பி அவர்கள். இப்போது எல்லாம் டாக்டர், பொறியாளர் ஆகவேண்டும் என்றால் பீஸ் கட்டி வரிசையில் நிற்க வேண்டியதுள்ளது. எங்களை எல்லாம் கோடீஸ்வரனாக்கிவிட்டு, அதில் என் பங்கு என்று கொஞ்சம் கூடக் கேட்காமல் சிரித்துக் கொண்டிருந்த அந்த மாதிரி குருக்கள் வணக்கத்துக்குரியவர்கள். குருவை வணங்கும் நாள் என்றெல்லாம் கொண்டாடுகிறார்களே, எங்களைப் பொறுத்தவரை நாங்கள் வேலை செய்யும் நாளெல்லாம் அந்த நாட்களாகவே இருக்கிறது. அவர் புகழ் வாழும், வாழ வேண்டும்"
இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.

