ஆர்சனிகம் ஆல்பம் 30 சி' என்ற ஹோமியோபதி மாத்திரைகள் கரோனா தொற்று ஏற்படுவதைத் தடுக்கும் என்று மத்திய ஆயுஷ் அமைச்சகம் அறிவித்திருக்கிறது. இதையடுத்து, தமிழக அரசும் இந்த மாத்திரிகளைப் பரிந்துரை செய்திருக்கிறது.
![]() |
| மாத்திரைகள் வழங்கும் மெடிக்கல் சிவா. |
இந்த நிலையில், கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் உள்ள ஆங்கில மருந்து விற்பனைக் கடைக்காரரான சிவகுரு 'ஆர்சனிகம் ஆல்பம் 30 சி' மாத்திரைகளை தனது வாடிக்கையாளர்களுக்கு இலவசமாகவே வழங்கி வருகிறார்.
சிவகுருவை 'மெடிக்கல் சிவா' என்றால்தான் எல்லோருக்கும் தெரியும். குறிஞ்சிப்பாடி மக்களுக்காக அவ்வப்போது இலவச மருத்துவ முகாம்கள், மஞ்சள் காமாலை தடுப்பு முகாம், காசநோய் தடுப்பு முகாம் உள்ளிட்ட முகாம்களை 'ஜூனியர் சேம்பர்' அமைப்புடன் இணைந்து தொடர்ந்து நடத்தி வருகிறார்.
தற்போது கரோனா தொற்றுப் பரவல் அதிகமாக இருக்கும் நிலையில், 'ஆர்சனிகம் ஆல்பம் 30 சி' மாத்திரைகள் குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறார் சிவகுரு. கரோனாவைத் தடுக்கும் திறன் இந்த மாத்திரைக்கு இருப்பதாக அரசே அறிவித்ததால் அந்த மாத்திரைகளைத் தேவையான அளவு கொள்முதல் செய்து தனது மருந்தகத்தில் வைத்துவிட்டார். இப்போது தனது மருந்தகத்திற்கு யார் வந்தாலும் 'ஆர்சனிகம் ஆல்பம்' மாத்திரைகளை இலவசமாகவே வழங்கி, அதை உட்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் புரியவைக்கிறார் சிவகுரு.
இதுகுறித்து 'இந்து தமிழ் திசை' இணையத்திடம் பேசிய சிவகுரு, "முதலில் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும்தான் இந்த மாத்திரைகளைக் கொடுத்தேன். இதைக் கேள்விப்பட்டு இன்னும் பலரும் என்னைத் தேடி வந்து கேட்க ஆரம்பித்தனர். அப்புறம்தான் தேவையான அளவுக்கு இந்த மாத்திரைகளை எனது மருந்தகத்திலேயே வாங்கி வைத்து இலவசமாகக் கொடுக்க ஆரம்பித்தேன். இதுவரைக்கும் 1,000 பேருக்கு மாத்திரைகளைக் கொடுத்துள்ளேன்.
![]() |
| மாத்திரைகள் வழங்கும் மெடிக்கல் சிவா. |
என் சக்திக்கு 3,000 பேருக்காவது இந்த மாத்திரைகளைக் கொடுத்துவிட வேண்டும் எனத் திட்டமிட்டுள்ளேன். தொண்டுள்ளம் கொண்ட நண்பர்கள் யாராவது எனக்குத் தோள் கொடுத்தால் பத்தாயிரம் பேருக்காவது இந்த மாத்திரைகளை இலவசமாகக் கொடுத்து முடிந்தவரை கரோனா தொற்று ஏற்படாமல் காக்கலாம்.
இரண்டு நபர்கள் உள்ள வீட்டுக்கு நாற்பது மாத்திரைகள் கொண்ட ஒரு பாக்கெட்டைத் தருகிறோம். அதிகம் பேர் இருந்தால் அதற்கேற்ப எண்ணிக்கையை அதிகமாக வழங்குகிறோம். ஒரு நாளைக்கு குறைந்தது ஐந்து மாத்திரைகள் வீதம் மூன்று முதல் ஐந்து நாட்களுக்குச் சாப்பிட்டால் மிக நல்ல பலன் கிடைப்பதை மருத்துவர்கள் உறுதி செய்திருக்கிறார்கள்.
பொதுமக்கள் அனைவரும் கட்டாயமாக இதை எங்கு கிடைத்தாலும் வாங்கிச் சாப்பிட்டு கரோனாவை வெல்ல வேண்டும். சேவை அமைப்புகளும் இந்த மாத்திரைகளை மக்களுக்கு வழங்க முன்வர வேண்டும்" என்று தெரிவித்தார்.
குறிஞ்சிப்பாடி பகுதியில், 'ஆர்சனிகம் ஆல்பம் 30 சி' மாத்திரை தேவைப்படுபவர்கள், 8903457970, 9976225830 இந்த அலைபேசி எண்களில் தொடர்பு கொண்டால் வீட்டுக்கே வந்து வழங்கிடத் தயாராய் இருக்கிறார் சிவகுரு.


