Type Here to Get Search Results !

வனம் காப்போம்

வனம் காப்போம்

மனிதன் நலமுடன் வளமுடன் வாழ்வதற்கு வனத்தை பேணிக்காக்கவேண்டும். வனம் அதாவது காடு என்றதும் ஒவ்வொருவருக்கும் ஒன்று நினைவுக்கு வரும். அதாவது ஒரு சிலருக்கு செடி, கொடிகள் நினைவுக்கு வரலாம்.

 

நம்மில் பலருக்கு யானை, புலி, சிங்கம் போன்ற விலங்குகள் நினைவுக்கு வரும். இன்னும் சிலருக்கு ஓங்கி உயர்ந்த மரங்களும், மலைகளும் நினைவில் தோன்றும். சிலருக்கு அமைதியான சூழலும், இயற்கையான இதமான காற்றும், பறவையினங்களும் அதன் இனிமையான ஓசையும், ஒடைகளும், அருவிகளும் எண்ணத்தில் ஓடும்.

ஆகமொத்தத்தில் காடு என்பது மேற்கண்ட அனைத்தையும் உள்ளடக்கியது என்பது நமக்கே தெரிகிறது.

தாவரங்கள் (புல், பூண்டு, செடிகொடிகள், ஒங்கி உயர்ந்த மரவகைகள்) விலங்கினங்கள் (சிறு புழு, பூச்சிகள், முயல், காட்டுப்பன்றி, மான், புலி, யானை, குரங்கு, கரடி, சிறுத்தை மற்றும் பறவைகள்) ஓடைகள், அருவிகள், மலைகள் மற்றும் உள்ள அனைத்தும் ஒன்றையொன்று சார்ந்து (வாழ்கின்றன) இருக்கின்றன. 

இவற்றில் ஏதாவது ஒன்றில் பாதிப்பு ஏற்பட்டாலும் காட்டிற்கு மட்டுமல்லாமல் மனித இனத்திற்கும் பாதிப்பு ஏற்படும். தாவர இனங்கள் அழிக்கப்பட்டால் தாவர உண்ணிகளான முயல், மான், காட்டுப்பன்றி போன்ற இனங்கள் அழியும். இந்த உயிரினங்கள் அழியும்பட்சத்தில் ஊன் உண்ணிகளான சிங்கம், புலி, சிறுத்தை போன்றவை உணவின்றி தவிக்கநேரிடும். 

எந்த ஒரு உயிரினமானாலும் உயிர்வாழ தண்ணீர் அவசியம். தண்ணீருக்கு மழை அவசியம். மழைக்கு மரம் அவசியம். எனவே எப்படி சிந்தித்தாலும் மரம் மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஒன்றாக விளங்குகிறது.

எனவே தான் வள்ளுவர் பொருட்பாலில் காடு என்றால் அது எவ்வாறு இருக்கவேண்டும் என அன்றே குறிப்பிட்டுள்ளார்.

மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடைய தரண். (அதிகாரம்: அரண்.   குறள் 742)

பொருள் விளக்கம்
மணிபோல் தெளிந்த நீரும், வெட்ட வெளியான நிலமும், மலையும்,
அழகிய நிழல் உடைய காடும் (குளிர்ந்த நிழலையுடைய காடு, செறிந்த காடு, அணி நிழற் காடு) ஆகிய இவை நான்கும் உடையதே அரண் ஆகும்.



எனவே காடு என்பது குளிர்ந்த நிழலையுடையதாக இருக்கவேண்டும் என கூறியுள்ளார். குளிர்ந்த நிழல் எப்போது கிடைக்கும் என்று பார்த்தால் அக்காட்டில் பலவகையான மரங்கள் பல நிலைகளில் அதாவது சிறு புல், பூண்டு, செடி, கொடிகள் முதல் ஓங்கி உயர்ந்த மரங்கள் இருந்தால் மட்டுமே வள்ளுவர் குறிப்பிட்ட குளிர்ந்த நிழலையுடைய காடு அதாவது அணிநிழற்காடு இருக்கும். அப்போதுதான் அது ஒரு அரணாக விளங்கும்.

ஒரு நாட்டின் பாதுகாப்பிற்கு காடு அவசியம். நாட்டின் பாதுகாப்பே மக்களின் பாதுகாப்பு. பாதுகாப்பு என்னும் ஒரு வார்த்தையில் அனைத்தும் அடங்கும்.
மக்களாகிய நாம்தான் நமது பாதுகாப்பை தற்போது அழித்துக்கொண்டிருக்கிறோம். நமது முன்னோர்கள் இயற்கையை நம்பி, அதனைச்சார்ந்து வாழ்ந்தபோது நலமுடனும், வளமுடனும் இருந்தனர். 

காலப்போக்கில் நாம் இயற்கையை நமது தேவைக்காக அழித்து முற்பட்டுவிட்டோம். அதன் விளைவுதான் பல இயற்கைச்சீற்றங்கள். இயற்கையை நாம் சீண்டினால் இயற்கைச்சீற்றங்கள் நம்மைச்சீண்டும் என்பதற்கு சுனாமி, வெள்ளப்பெருக்கு, நிலநடுக்கம் என அடுக்கிக்கொண்டே போகலாம். 

நாகரீகம் வளர்ச்சி ஏற்படுகிறது, அதேசமயம் இயற்கையின் வீழ்ச்சியும் ஏற்படுகிறது.. இனியும் காலம் தாழ்த்தாமல் இயற்கையை காக்கவேண்டும்.

வனம் காப்பதால் நாம் அடையும் பயன்கள் அறிவோம் 

மனித இனம் பூமிக்கு வழங்கியது குறைவே.  ஆனால்; இயற்கை அன்னையான வனத்திடம் இருந்து பெற்றது, பெற்றுக் கொண்டிருப்பது, பெறப்போவது என்றும் ஏராளம்.  

சுவாசிக்கத்தேவையான காற்று, எரிபொருள், கால்நடைகளுக்கான தீவனம், உணவுக்குத் தேவையான எண்ணெய், மெழுகு, கோந்து, நார், மரம், மழை நீர் ஆதாரம், பெருவெள்ளம் தடுத்தல், உணவு, மாசு பெற்ற மண்ணைச் சுத்தப்படுத்த, மருத்துவம் (மூலிகைப் பயன்கள்), வேலை, புவி வெப்பமாகாமல் தடுத்தல், இயற்கைப் பேரிடர்களில் இருந்து காத்தல்.. இப்படிப் பயன்கள் பல.  

வனம் என்றால் அதில் வன உயிரினங்களும் அடங்கும். வனம் அடர்த்தியாவதற்கும், அதன் உயிர்ச்சூழல் நிலைத்திருப்பதற்கும் வனவிலங்குகள் தேவை.  ஒவ்வொரு விலங்கின வகைகளும் வனம் வளர்ச்சியடைய இன்றியமையாததாகிறது. 

எனவே எந்த ஒரு உயிரினத்தையும் வேட்டையாடுவது மற்றும் அதற்கு தீங்கு விளைவிப்பது நாமே நம் மனிதகுலத்திற்கு செய்யும் தீங்காகும்.

மனித இனத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.  இத்தேவைகள் அனைத்தும் பெரும்பாலும் வனம் சார்ந்ததே.  ஆகவே தான் இது போன்ற அழிவைத் தடுக்க மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வன நாள் கொண்டாடப்படுகிறது.  

மரங்களை அழித்து வனப் பகுதிகள் சுருங்கினால் பருவ மாற்றங்கள் ஏற்படும். இதனால் பூமியில் இருக்கும் அத்தனை உயிரினங்களும் ( மனிதன் உட்பட) அழிவையே சந்திக்க நேரிடும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.

இந்தியாவில் வனங்கள் அழிந்து வருவதைத் தடுக்க 1988 ஆம் ஆண்டு தேசியவனக்கொள்கை வெளியிடப்பட்டது.  இக்கொள்கைப்படி, மரம் சார்ந்த தொழிற்சாலைகள் தங்கள் இடுபொருள் தேவைக்கு, வனங்களில் இருந்து மரம்வெட்டுவது தடை செய்யப்பட்டது.



வனம் இல்லையென்றால் மனிதன் மட்டுமல்ல எந்த உயிர்களுமில்லை என்பதை ஆறு அறிவு படைத்த மனிதர்களாகிய நாம் நினைக்கவேண்டும்.  

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies