Type Here to Get Search Results !

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 39 நாளில் 1 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்ந்ததின் பின்னணி என்ன?

இந்தியாவில் 39 நாளில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக 
உயர்ந்ததின் பின்னணி என்ன என்பதை மருத்துவ நிபுணர்கள் அம்பலப்படுத்தி 
உள்ளனர்.



இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று கடந்த ஜனவரி மாதம் வெளிப்படத்தொடங்கியது. ஆனால் இந்த மாதத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவல் அசுர வேகம் எடுத்து மக்களை பீதியில் ஆழ்த்தி வருகிறது. நேற்று தொடர்ந்து 4-வது நாளாக 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை தொற்று பாதித்து உள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 100 என்ற எண்ணிக்கையில் இருந்து 1 லட்சம் என்ற எண்ணை தொடுவதற்கு 64 நாட்கள் ஆயின. அதிலும் கொரோனா தொற்று பரவத்தொடங்கிய நாளில் இருந்து 1 லட்சம் என்ற எண்ணிக்கையை தொடுவதற்கு 110 நாட்கள் ஆகி உள்ளன. கடந்த மாதம் 19-ந் தேதிதான் இந்த எண்ணிக்கையை இந்தியா அடைந்தது.

தொடர்ந்து படிப்படியாக தொற்று அதிகரித்து 4 லட்சம் பேருக்கு பாதிப்பு என்ற நிலை, 6 நாட்களுக்கு முன்னர் வந்தது. இப்போது அது 5 லட்சத்தை நேற்று தாண்டி இருக்கிறது.

கொரோனா பாதிப்பு 1 லட்சம் என்ற எண்ணிக்கையில் இருந்து 5 லட்சம் என்ற எண்ணிக்கையை தொடுவதற்கு வெறும் 39 நாட்கள் மட்டுமே எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவல் தடுக்க மார்ச் மாதம் 25-ந் தேதி ஊரடங்கு போடப்பட்டது. 21 நாட்கள் அது அமலில் இருந்தது. தொடர்ந்து மே மாதம் 3-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அதன்பின்னர் மே 17-ந் தேதி வரையும், அடுத்து மே 31-ந் தேதி வரையும் நீட்டிக்கப்பட்டது.

அதன்பின்னர் கொரோனா கட்டுப்பாட்டு மண்டலங்களில் மட்டும், ஊரடங்கு தொடரும் என அறிவிக்கப்பட்டது. இது நாளை மறுதினம் (30-ந் தேதி) வரை நீடிக்கிறது.

சரிந்து விழுந்த பொருளாதாரத்தை தூக்கி நிறுத்துவதற்காக ‘அன்லாக்-1’ என்ற பெயரில் தளர்வு நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டன. அதில் இருந்துதான் கொரோனா வைரஸ் தொற்று பரவல், அசுர வேகம் எடுத்து இருக்கிறது.

கொரோனா தொற்று பரவல் மின்னல் வேகம் எடுத்ததின் பின்னணி குறித்த மருத்துவ நிபுணர்களின் கருத்துக்கள் வருமாறு:-

டாக்டர் மோனிகா மகாஜன் (மேக்ஸ்ஹெல்த்கேர் உள்மருத்துவ இயக்குனர்):

கொரோனா வைரஸ் தொற்று இப்படி வேகம் எடுத்ததின் காரணத்தை அறிந்து கொள்ள வேண்டியது முக்கியம் ஆகும். வைரஸ்கள் பல்கிப்பெருகியதால், தொற்று பாதிப்பு, விரைவான காலத்தில் இரட்டிப்பு ஆகிறது.

கொரொனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக போடப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தியபின்னர், மக்களின் நடத்தை மாறிவிட்டது. தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பதில் முன்புபோல பொறுப்புணர்வுடன் மக்கள் நடந்து கொள்ளவில்லை. பரிசோதனைகளும் மிகவும் தாராளமாக நடக்கத் தொடங்கி விட்டது. பரிசோதனை கட்டணம் வெகுவாக குறைந்து விட்டது. இதனால் பரிசோதனை எளிதாகி விட்டது. எனவே கூடுதலான தொற்று பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது.

டாக்டர் அரவிந்த் குமார் (டெல்லி சர்கங்காராம் ஆஸ்பத்திரி):

கொரோனா பரிசோதனை எண்ணிக்கை அதிகரித்து இருப்பதே நிச்சயமாக தொற்று பாதிப்பு அதிகரித்ததற்கு காரணம் ஆகும். பரிசோதனை செய்து கொள்கிறவர்களில் தொற்று உறுதி செய்யப்படுகிறவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே போகிறது. இதற்கு காரணம், ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தியது ஆகும். இதனால் மக்கள் தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்பதை முற்றிலும் மறந்து விட்டார்கள்.

இவ்வாறு மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.

பரிசோதனைகள் அதிகரித்து இருப்பது பற்றி இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) சில புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. அதன் முக்கிய அம்சங்கள் இவை:-

* நேற்று முன்தினம் (26-ந் தேதி) வரையில், மொத்தம் 79 லட்சத்து 96 ஆயிரத்து 707 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

* கடந்த வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 2 லட்சத்து 20 ஆயிரத்து 479 மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. கொரோனா பரவத்தொடங்கியதில் இருந்து ஒரே நாளில் செய்யப்பட்ட அதிகபட்ச சோதனை அளவு இதுதான்.

* நாடு முழுவதும் பரிசோதனைக்கூடங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 1007 பரிசோதனைக்கூடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் அரசுத்துறை பரிசோதனைக்கூடங்களின் எண்ணிக்கை 734 ஆகவும், தனியார் துறையின் பங்களிப்பு 273 ஆகவும் உள்ளது.



* மே 25-ந் தேதி வரை தினசரி பரிசோதனை வீதம் 1.4 லட்சமாக இருந்தது. தற்போது அது 3 லட்சம் அளவுக்கு உயர்ந்துள்ளது.

ஆக இந்தியாவில் 1 லட்சம் பாதிப்பு என்பது 5 லட்சமாக 39 நாளில் ஏற்றம் கண்டிருப்பதில் பரிசோதனைகள் அதிகரித்து இருப்பது முக்கிய பங்கு வகித்து இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மையாக அமைந்துள்ளது.

ஒட்டுமொத்தமாக நாட்டின் பாதிப்பு 5 லட்சத்தை கடந்துள்ள நிலையில், இதில் மராட்டியம், தமிழகம், டெல்லி, தெலுங்கானா, குஜராத், உத்தரபிரதேசம், ஆந்திரா, மேற்கு வங்காளம் ஆகிய 8 மாநிலங்கள் மட்டுமே 85½ சதவீதம் பங்களிப்பு செய்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சக புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.

இந்த தகவல், டெல்லியில் மத்திய சுகாதார மந்திரி டாக்டர் ஹர்சவர்தன் தலைமையில் நேற்று நடந்த கொரோனா வைரஸ் தடுப்புக்கான மத்திய மந்திரிகள் கூட்டத்தில் வெளியானது.

இதேபோன்று கொரோனா பாதித்து இறந்தவர்கள் எண்ணிக்கை 16 ஆயிரத்தை எட்டும் நிலையில், இதில் மேலே குறிப்பிட்ட 8 மாநிலங்கள் 87 சதவீத பங்களிப்பை செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies