சென்னையை அடுத்த திருவொற்றியூர் அரசு மருத்துவமனை வளாகத்தில், 68 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞர் கைது: சென்னையில் நடந்த கொடூரம்
சென்னையை அடுத்த திருவொற்றியூரில் அரசு மருத்துவமனை வளாகத்தில், சுமார் 68-வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவரின் சடலம் கிடந்தது. மூதாட்டி ரத்த வெள்ளத்தில் படுகாயத்துடன் சடலமாக கிடப்பதைக் கண்டு அப்பகுதியினர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, திருவொற்றியூர் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில். இறந்தவர் திருவெற்றியூர் மார்க்கெட் பகுதியை சேர்ந்த கிருஷ்ணவேணி என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக விசாரணை செய்த போலீசார், அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது கண்காணிப்பு கேமராவில் கண்டெய்னர் லாரியில் ஒரு நபர் வேகமாக ஏறி செல்வது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட நபரை தேடி பிடித்து விசாரணை செய்ததில், அவர் சத்தியமூர்த்தி நகர் பகுதியை சேர்ந்தவர் என்பதும் அவர் பெயர் ஜெயக்குமார்(32) என்பதும் தெரியவந்தது .
ஜெயக்குமாரிடம் நடத்திய தீவிர விசாரணையில், ஜெயக்குமார் மருத்துவமனை அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தியுள்ளார். பிறகு அங்கு இருந்த மூதாட்டி கிருஷ்ணவேணியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது போல் உடல் உறவுக்கு அழைத்துள்ளார். அதற்கு மூதாட்டி மறுத்துள்ளார். மூதாட்டியை வலுக்கட்டாயமாக பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார்.
மூதாட்டி அவரிடம் இருந்து தப்பித்துக்கொள்ள, எழுந்து ஓடியுள்ளார். இதை பார்த்த ஜெயக்குமார் அருகிலிருந்த கட்டையை எடுத்து தாக்கியுள்ளார். கீழே விழுந்த மூதாட்டி, உயிருடன் இருந்தால் மாட்டிக்கொள்வோம் என்று பயந்த ஜெயக்குமார், அருகில் இருந்த கல்லை எடுத்து மூதாட்டியின் தலையில் போட்டு கொன்றுவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடியது அவர் அளித்த வாக்குமூலத்தில் அம்பலமாகியுள்ளது. இதையடுத்து திருவொற்றியூர் போலீசார் ஜெயக்குமார் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.


